Monday, December 27, 2010

493.கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி - TPV12

திருப்பாவை பன்னிரண்டாம் பாடல்

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலை கேட்டும் உறங்குவதேன்?

கேதார கெளள ராகம் , ஆதிதாளம்

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச்செற்ற
மனத்துக் கினியானை பாடவும் நீ வாய் திறவாய்
இனிதான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்,
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோரெம்பாவாய்.

பொருளுரை:

பால் கறப்பார் இன்றி, இளங்கன்றுகளுடைய எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்து, அவை தங்களது கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், அவற்றின் முலைக்காம்புகளின் மூலம் பால் இடைவிடாது சுரந்து, வீட்டின் தரை ஈரமாகி, அதனால் வீடெங்கும் பாலும் மண்ணும் கலந்து சேறாகியிருக்கும் இல்லத்துக்குத் தலைவனான பெருஞ்செல்வனின் தங்கையே!

பனி எங்கள் தலையில் விழுவதை பொருட்படுத்தாமல், உன் மாளிகையின் வாசற்காலைப் பற்றி நின்ற வண்ணம், (சீதாபிராட்டியை தன்னிடமிருந்து பிரித்ததால்) பெருங்கோபம் கொண்டு இலங்கை வேந்தன் ராவணனை மாய்த்தவனும், நம் உள்ளத்துக்கினியவனும் ஆன ஸ்ரீராமபிரானின் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருப்பதை கேட்டும் நீ ஏதும் பேசாதிருக்கலாமா! இப்போதாவது விழித்தெழுவாய்! ஊரில் உள்ளோர் அனைவரும் எழுந்து விட்ட பின்னரும் நீ பெருந்தூக்கத்தில் இருக்கலாமா! உன் ஆழ்ந்த உறக்கத்தின் பொருள் தான் என்ன?

பாசுரச் சிறப்பு:


கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர

சென்ற பாசுரத்தில் (பொற்கொடியே, புற்றரவல்குல், புனமயிலே, செல்வப் பெண்டாட்டி) பெண்மையைக் கொண்டாடிய ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் உன்னதத்தைச் சொல்கிறாள்! 'கன்றுக்கு பசிக்குமே' என்ற எண்ணம் ஏற்பட்ட மாத்திரத்தில், அவ்விலத்து எருமைகள் கறக்காமலேயே பாலைச் சுரக்கத் தொடங்கினவாம். தன் குழந்தைக்குப் பசி என்பதை ஒரு தாய் அது அழுவதற்கு முன்னமே புரிந்து கொள்கிறாள் இல்லையா! "சாப்பிட்டு விட்டு எந்த வேலை இருந்தாலும் பாரேன்" என்ற அன்னையின் குரல் கேட்காத வீடும் இருக்கிறதா என்ன!

'நனைத்தில்லம் சேறாக்கும்' - அந்த வீட்டில் அத்தனை கறவைகள் இருந்தன. கன்றை எண்ணி (உண்டு செழித்திருந்த) எருமைகள் பாலைச் சுரந்தாலும் கன்றுகள் தான் எவ்வளவு குடிக்க முடியும்! அவை குடித்த பின்னும் சுரந்து கொண்டேயிருந்த பாலானது, தரையில் ஓடி, மண் புழுதியுடன் கலந்து வீடே சேறாகி விட்டதாம். அவ்வீட்டின் செல்வச் செழிப்புக்கு தரையெல்லாம் பால் ஓடுவதை ஒரு குறியீடாகக் கொள்ள வேண்டும்.

முந்தைய (கற்றுக் கறவை கணங்கள் பல) பாசுரத்தில், உறங்கும் பெண்ணின் தந்தையை முன்னிருத்தி (கோவலர் தம் பொற்கொடியே), ஆண்டாள் அவளை துயிலெழுப்பினாள். இப்பாசுரத்தில் உறங்கும் கோபியர் குலப் பெண்ணை, அவளது அண்ணனை முன்னிருத்தி (நற்செல்வன் தங்காய்!) ஆண்டாள் எழுப்புகிறாள். இந்த அண்ணனானவன், கண்ணனுக்கு மிக நெருக்கமானவன். அதனாலேயே அவனுக்கு நற்செல்வன் என்ற சிறப்பு தரப்பட்டது!

ஆனால், அவன் தன் தினக் கடமையான பால் கறத்தலை செய்யாததால் தானே, சுரந்த பாலால் வீடே சேறானது. பின் அவன் எப்படி "நற்செல்வன்" ஆனான்? கோதை நாச்சியார் சொல்ல வருவதை புரிந்து கொண்டால், அதற்கும் சரியான பதில் கிடைத்து விடுகிறது!


நற்செல்வன் என்பதற்கு ஞானத்தையும், பிரம்மானுபவத்தையும், பகவத் கைங்கர்யத்தையும் செல்வங்களாகக் கிடைக்கப் பெற்றவன் என்று பொருளாம். அவன் அன்று கண்ணனுக்கு சேவை (பகவத் கைங்கர்யம்) செய்ய புறப்பட்டுச் சென்று விட்டதால், அவனது நித்ய கடமையை(பால் கறப்பது) செய்ய இயலாமல் போனது. அதனாலேயே, எருமைகளின் முலைக்காம்புகளிலிருந்து பால் சுரந்து இல்லமெங்கும் ஈரமாகிப் போனது !! அப்பேர்ப்பட்ட அண்ணனின் தங்கையான (நற்செல்வன் தங்காய்) இவளும் ஓர் உத்தம அதிகாரியே.

இலக்குமணன், தன் தாய் சுமித்திரையின் கட்டளையை ஏற்று, ராமபிரான், சீதையுடன் வனம் சென்று, அவர்களுக்குத் தொண்டாற்றிய படியால், தன் குடும்ப வாழ்வின் கடமையை செய்யத் தவறியது போல தோன்றினாலும், அவன் குற்றம் புரிந்தவன் ஆக மாட்டான். அதாவது, பகவத்-பாகவத சேவை, நித்ய சேவையைக் காட்டிலும் முக்கியமானது என்பது இதிலிருந்து கிடைக்கும் செய்தியாம். சில நேரங்களில், சாதாரண சேவைகளை விடவும் அசாதாரண சேவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன தானே!

சில பூர்வாச்சார்யர்கள், கன்றுக்காக இரங்கி பாலைச் சுரக்கும் எருமையை, அன்பே வடிவான திருமகள் உருவகமாகவும், செல்வத்தின் அதிபதியான திருமகளை பரமன் தன்னிடத்தில் கொண்டதால், நற்செல்வனை எம்பெருமான் உருவாகவும் பொருள் அருளியிருக்கிறார்கள்! ஆக, எம்பெருமான், மகாலஷ்மி என்று இருவரும் இப்பாசுரத்தில் குறிப்பில் உணர்த்தப்பட்டதால், இப்பாசுரம் த்வய மந்திரத்தை (ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே, ஸ்ரீமதே நாராயாணாய நமஹ!) போற்றுவதாகக் கொள்ள வேண்டும்.

"நற்செல்வன் தங்காய்" என்று வருகிறதே என்ற ஐயம் எழலாம்! மேற்சொன்ன வகையில் இப்பாசுரத்தை நோக்கும்போது, திருமகள் "ஹிரண்மயி" என்பதால் தங்கை என்ற பதத்தை "தங்கம்" என்று கொள்ள வேண்டும்.

அக்கோபியின் அண்ணன், ஸ்ரீகிருஷ்ணனின் அந்தரங்க தாசன், அதாவது, ஸ்ரீராமனுக்கு இளையபெருமாள் போல. அதனாலும், சக்ரவர்த்தித் திருமகன் பெண்களை ஒருபோதும் வருத்தாமையாலும், இப்பாசுரத்தில் ஸ்ரீராமபிரானின் சிறப்பு சொல்லப்பட்டது. ராம(ரிடம்) சரணாகதியைக் கொண்டாடும் பாசுரமாகவும் இதைப் பார்க்க முடிகிறது!

மேலும், "சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கினியானை" என்று 5 வார்த்தகளில் ராம காவியத்தையே சுருக்கி விடுகிறார் சூடிக் கொடுத்த சுடர்கொடி! ஸ்ரீராமன் என்ற உத்தம மகாபுருஷனுக்கு கோபம் உண்டு, ஆனால் வெறுப்பு கிடையாது.

தன் மனத்துக்கினிய சீதையை கவர்ந்து சென்றதால் தானே, (கோபமே வராத) ஸ்ரீராமனுக்கு சினம் உண்டாகி, இராவணனை வதம் செய்ய நேர்ந்தது. சரி, ராமன் எப்படி "மனத்துக்கினியான்" ஆகிறான்? அவன் ஏகபத்தினி விரதன் ஆன காரணத்தாலே! எல்லா நற்குணங்களைக் காட்டிலும், ஒரு கணவன் ஏகபத்தினி விரதனாக இருப்பதே, அவன் மனைவிக்கு உவகை தரும்.

ஓர் ஆண்மகனுக்கு பெருமை சேர்க்கும் குணநலனாக அது கருதப்படுகிறது! அதனால், ராமபிரானை மனத்துக்கினியானாக நாச்சியார் கொண்டாடுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ராமனை "புண்ணியன்" என்றும் ஆண்டாள் பத்தாம் பாசுரத்தில் (நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்) போற்றியதை நினைவு கூர வேண்டும்.

"அனைத்தில்லத்தாரும் அறிந்து" எனும்போது, ஆய்ப்பாடியிலுள்ள அத்தனைப் பெண்டிரும் உறங்கும் இந்த ஒருத்தியை எழுப்புவதற்காக அவள் வீட்டு வாசலில் பழியாய் கிடப்பது குறிப்பில் உணர்த்தப்பட்டது!


மேலும், சென்ற பாசுரத்தில் ஆயர்கள் பால் கறந்ததாகச் (கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து) சொன்னபோது, கர்மயோகத்தின் அவசியம் குறிப்பில் உணர்த்தப்பட்டதாகவும், இப்பாசுரத்தில் (நற்செல்வன் திருச்சேவையில் இருந்தபடியால்!) பால் கறக்காமை விவரிக்கப்படுவதை கர்மயோகத்தைக் காட்டிலும் பகவத் / பாகவத சேவையின் உயர்வைச் சொல்வதாகவும், எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அன்னங்கராச்சார் சுவாமிகள் கூறுவார்.

அடுத்து, கோதை நாச்சியார் விவரிக்கும் ரம்யமான காட்சியைப் பாருங்கள். மேலே, பனிமழை பொழிந்து வெள்ளமிட்டு தலை நனைக்க, கீழே பால் பெருகி வெள்ளமிட்டு கால் நனைக்க, இவை நடுவில் திருமாலினிடத்து (கண்ணபிரான்) பெருங்காதல் வெள்ளமிட்டு மனதை நனைக்க, அந்த உத்தம பாகவதையின் வீட்டு வாசலே கதியென்று வந்து, எம்பெருமானை போற்றிப் பாடி, தங்கள் உய்வுக்கு வேண்டி அவளை துயிலெழுப்புகிறது ஒரு கோபியர் கூட்டம்!!!

பாசுர உள்ளுரை:

கனைத்து இளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
- இங்கு எருமை கருணை மிக்க (தன்னிடம் உள்ள ஞானத்தை வாரி வழங்கும்) ஆச்சார்யனைக் குறிப்பில் உணர்த்துகிறது. கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கிறது.

முலைவழியே நின்றுபால் சோர - எருமையின் நான்கு முலைக் காம்புகளிலிருந்து வெளிப்படும் பாலானது, நான்கு வேதங்களின் சாரத்தைக் குறிப்பது என்பது இதன் உட்பொருளாம். இதையே, சுருதி, ஸ்மிருதி, பஞ்சராத்ரம், திவ்ய பிரபந்தம் என்ற நான்கை கற்றுணர்ந்து கிடைத்த ஞானமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

பனித்தலை வீழ - அஞ்ஞானமிக்க (நாங்கள்)

நின் வாசற்கடை பற்றி - "ஓம் நமோ நாராயணா" என்ற மந்திரத்தைப் பற்றிக் கொண்டு

தென்னிலங்கைக் கோமானைச் செற்ற - கட்டுப்பாடற்ற புலன்சார் உணர்வுகளை நெறிப்படுத்த வல்ல

மனத்துக்கினியானை - கோகுலத்து கோபியர் கண்ணனைக் காணும் பெரும்பேறு பெற்றவர்கள். அதனால், அவர்களுக்கு கண்ணபிரான் "கண்ணுக்கினியவன்" ஆவான் :) ஆனால், ஸ்ரீராமபிரானை (ராம அவதாரம் முடிந்து விட்டபடியால்!) கோபியரால் நினைக்க மட்டுமே முடியும், அதனாலேயே அவர்களுக்கு சக்ரவர்த்தி திருமகன் "மனத்துக்கினியவன்" ஆகின்றான் என்று அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.

ஈதென்ன பேருறக்கம் - நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா ?

அனைத்தில்லத்தாரும் அறிந்து - பகவத் அனுபவத்தை அனைவரும் பெற வேண்டியதோடு, அது குறித்து பேசப்படுவும் வேண்டும் அவசியத்தை உணர்த்துவதாம்!
**************************************

இது பொய்கை ஆழ்வாரை துயிலெழுப்பும் பாசுரம் என்று கூறுவது ஐதீகம். அதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்:

"நற்செல்வன் தங்காய்" என்ற பதம் பொய்கையாருக்குப் பொருந்தும். குளத்தில் இருந்த தாமரை மலரில் (திருமகளைப் போலவே!) இவர் தோன்றியவர். அதனால், திருமகளின் தங்கை என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார்.

"பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று இவ்வாழ்வாரே தன் நிலை குறித்து பாடியிருக்கிறார் ஒரு பாசுரத்தில் ! அப்படி அவரது கண்ணீரும், அவர் பிறந்த இடத்தின் (பொய்கை) தன்மையும் சேர்ந்து, பொய்கையாரின் இல்லம் "நனைத்து இல்லம் சேறாக்கும்" என்ற உவமானத்துக்கு பொருத்தமாக வருகிறது தானே :)

ஒருவர் பேச/பாடத் தொடங்குமுன் தொண்டையை செருமுவது (கனைத்து!) வழக்கம் தானே! அதனால், "கனைத்து" என்பது முதல் 3 ஆழ்வார்களில் முதல்வரான பொய்கையாருக்கு மிகப் பொருத்தமே, அதாவது இவருக்கு முன் எந்த ஆழ்வாரும் பாசுரங்கள் பாடவில்லையே!

இளம் கற்றெருமை கன்று - ஏற்கனவே சொன்னபடி, பொய்கையார் என்ற (ஆழ்வார்களில்) முதல் ஆச்சார்யனை கற்றெருமை உருவகப்படுத்துகிறது. கன்று என்ற பதம் அவருக்குப் பின்னாலும் ஆழ்வார்கள் உள்ளனர் என்பதை குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்ளலாம்.

கன்றுக்கிரங்கி - அடியவர்களான நம் மேல் கருணை கொண்டு, பொய்கையார் தனது திருவந்தாதியை நமக்கு அருளினார்!

இனிதான் எழுந்திராய் - " "பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சி அழுதேன்" என்று விம்மிய நீரே இப்படி உறங்கலாமா?" என்று கோதை நாச்சியார் பொய்கையாரை கேள்வி கேட்கிறார். எதற்கு ? துயில் நீங்கி வந்து, ஆண்டாளுக்கும், கோபியர்களுக்கும் (அடியவர்களுக்கு) ஞானோபதேசம் செய்து உய்வுக்கு வழி காட்டுவதற்காக!

அனைத்தில்லத்தாரும் அறிந்து - ஆண்டாள் பாடியது பொய்கையாரின் "அறியும் உலகெல்லாம் யானேயும் அல்லேன்" என்ற பாசுர வரிகளை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளது!

இப்பாசுரத்தின் முடிவில், கோதை நாச்சியார், தன்னிலும் மூத்தவரான அனைத்து ஆழ்வார்களையும் துயிலெழுப்பி விடுவதாக, இது குறிப்பில் உணர்த்துவதாம். அதாவது, ஆழ்வார் திருக்கோஷ்டியில் உள்ள மதுரகவியாரையும், ஆண்டாளையுமே சேர்த்துத் தான்!

இதில் மதுரகவியார் எப்படி வருகிறார்? "நற்செல்வன் தங்காய்" என்பதை "நற்செல்வன் தன் கையே" என்று கொள்ளும்போது, நற்செல்வன் என்பது திருவாய்மொழி அருளிய குருகூர் பிரான் ஆன நம்மாழ்வரை குறிப்பதாக உள்ளர்த்தம். அப்படிப் பார்க்கும்போது, அவருக்கு "கையாக" இருந்து நம்மாழ்வாரின் திருப்பாசுரங்களை பதிவு செய்த மதுரகவி ஆழ்வாரை, "நற்செல்வன் தங்காய்" குறிப்பில் உணர்த்துவதாக சொல்லலாம் தானே !

மேலும், எம்பெருமானாரை (எந்தை ராமானுச முனி) நற்செல்வனாகக் கொண்டால், "நற்செல்வன் தங்காய்" என்பது ஆண்டாளையே குறிப்பில் உணர்த்துவதாகிறது!

"கோதாத்ர ஞானத் திருப்பாவை பாடிய பாவைத் தங்காய்" என்பதையும், "பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே" என்பதையும் நினை கூர வேண்டும்!

இறுதியாக, இந்த ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி என்பதை கோதையாரின் திவ்யப் பாசுரங்களை சுவைப்பதற்கான ஆனந்த அனுபவமாக பார்க்க வேண்டும். அப்போது ஆண்டாள் தன்னையே துயிலெழுப்பிக் கொள்ள முடியுமா போன்ற கேள்விகள் எழாது..

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, December 26, 2010

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து - TPV11

திருப்பாவை பதினொன்றாம் பாடல்

பெண்ணே, அசையாமல் பதில் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?

உசேனி ராகம் , மிச்ரசாபு தாளம்

கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து,
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றமொன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.


பொருளுரை:

கன்றுகளை ஈன்று, மிகுதியாக பால் சுரக்கும் பசுக்கூட்டங்களை கறப்பவர்களும், பகைவர்களின் பலம் அழிய, அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று போர் புரிபவர்களும் ஆன, ஒரு குறையுமில்லாத, இடையவர்களின் குலத்தில் தோன்றிய தங்கக்கொடியை போன்ற அழகிய வடிவுடைய பெண்ணே!

புற்றிலிருந்து வெளிவந்து படமெடுக்கும் நாகத்தின் கழுத்துக்கு நிகரான மெல்லிடையும், கானகத்து மயிலை ஒத்த சாயலையும் கொண்டவளே, விழித்தெழுந்து வருவாயாக! ஊரிலுள்ள அனைத்து தோழியரையும், உறவினர்களையும் அழைத்து வந்து, உன் வீட்டின் முற்றத்தில் குழுமி, கார்மேக நிறக் கண்ணனின் திருநாமங்களை போற்றிப் பாடியபடி உள்ளோம்! செல்வம் நிறைந்த பெண்ணை, நீ சிறிதும் அசையாமலும் பேசாமலும் இவ்வாறு உறங்குவதன் அர்த்தத்தை நாங்கள் அறியோம்!


பாசுரம் தரும் செய்திகள்:

"கற்றுக்கறவை கணங்கள் பல கறந்து" - இச்சொல்லாடலுக்கு 'அக்கோவலர் இல்லத்தில் ஏராளமான (எண்ணிக்கை தெரியாத அளவுக்கு!) பசுக்கள் இருந்தன. அவற்றில் கன்றுகள் போல் இருந்தனவும் ஈன்று பாலை சுரக்கத் தொடங்கி விட்டனவாம்' என்ற அர்த்தத்தை வைணவப் பெருந்தகைகள் கூறிச் சென்றுள்ளனர். ஆக அவ்வீட்டில், கன்று, கறவை என்ற இரண்டு வகையுமே பாலைச் சுரந்தன, சிறுவயதிலேயே ஞானத்தைப் பொழிகின்ற ஆச்சார்யர்களைப் போல!

அக்கோவலர் தம்/பிறர் தேவைக்காகவும், பசுக்களின் மடியில் பால் கட்டிக் கொண்டு அவை துன்புறக்கூடாது என்ற எண்ணத்திலும், அத்தனை பசுக்களிடமும் நிதம் பால் கறக்கும் கடுமையான தொழிலை மனமகிழ்வோடு செய்து வந்தார். அதோடு, (செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்) பகைவரை அவரது இருப்பிடத்திற்கே சென்று, வென்று அடக்கும் திறம் படைத்தவர் அவர்.

அட, பால் கறக்கும் ஆயருக்கு ஏது பகைவர் என்ற கேள்வி எழுவது நியாயமே! கண்ணனின் பகைவர் தான் ஆயர்பாடியில் வாழ்ந்த அனைவருக்கும் பகைவர்! அதனால் தான் நாச்சியார் பேர் எதுவும் கூறாமல், 'செற்றார்' என்று பொதுவாக பகைவரைக் குறிக்கிறார்.

அக்கோவலர் பகைவருடன் போரிட்டு அவர்தம் பலத்தையும், திறனையும் குன்றச் செய்து அவர்களை வெற்றி கொண்டாலும், அப்பகைவரை அழிப்பதில்லை. அதனாலேயே அவரை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்கிறாள் ஆண்டாள்!

அதோடு, அக்கோவலர், பக்தி, ஞான யோகங்களை கடைபிடிக்காத போதும், கர்ம யோகத்தில் சிறந்து விளங்குவதால், அதுவே பரமனுக்குப் போதுமானது என்பதை "குற்றமொன்றில்லாத கோவலர்" என்பதின் வாயிலாக ஆண்டாள் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.

அத்தகைய "குற்றமொன்றில்லாத கோவலர்" வீட்டில் பிறந்த பெண் "பொற்கொடி"யாகத் தானே இருக்க முடியும். கர்மயோகியின் மகளாகப் பிறந்த பெண் இப்படித் தூங்கலாமா என்று ஆண்டாள் விசனப்படுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறதில்லையா :)

நேர வித்தியாசத்தைக் கூட, ஒரு பாசுரத்திலிருந்து அடுத்த பாசுரத்துக்குச் செல்கையில், ஆண்டாள் அழகாகக் குறிக்கிறாள். "எருமைச் சிறுவீடு மேய்வான பரந்தன காண்" என்று 8வது பாசுரத்தில் பாடிய கோதை, இப்பாசுரத்தில் அவற்றைக் கறக்கும் நேரம் நெருங்கி விட்டதை சொல்லி, உறங்குபவளை எழுப்புகிறாள்!

"புற்றரவல்குல் புனமயிலே" என்று அப்பெண்ணை வர்ணிக்க ஒரே நேரத்தில், பாம்பையும் அதன் பரமவைரி மயிலையும் துணைக்கழைத்ததில்(oxymoron போலத் தோன்றினாலும்!) ஆண்டாளின் கவிநயம் தெரிகிறதல்லவா! உறங்கும் அப்பெண்ணின் கூந்தல் பரந்து கிடப்பது, அழகான மயில் தோகை விரித்தாடுவதை போலுள்ளதாம். அதோடு, தனது இயல்பான இடமான வனத்தில் சுதந்திரமாக வசிக்கும் "புன"மயிலே மகிழ்ச்சியோடு இருக்கும்!

ஒரு வகையில், பொற்கொடி, புனமயில் போன்ற உருவகங்கள் அப்பெண்ணின் மெல்லிய இயல்பை உணர்த்துவதாம். அப்பொற்கொடி நாடும் கொழுகொம்பு கண்ணனன்றி வேறு யாராக இருக்க முடியும்! மெல்லிய இயல்புடையவளாயினும், "புற்றரவல்குல்" (படமெடுக்கும் நாகத்தின் கழுத்தையொத்த இடை) என்ற வர்ணனை அவ்வடியவளின் (கண்ணனை அடைய வேண்டும் என்ற) வைராக்கியத்தைக் குறிப்பிலுணர்த்துவதாக வைணவப் பெரியோர் அருளியிருக்கிறார்கள். அதாவது, "சிறுத்த இடை" என்பது சிற்றின்ப ஆசை சிறுத்து வைராக்கியம் மிகுந்த (பற்றற்ற) நிலையைக் குறிப்பதாம்!

இத்தனை விரிவாக (பொற்கொடி, புற்றரவல்குல், புனமயிலே) என்று அப்பாகவதையின் புறத்தோற்ற அழகை ஆண்டாள் பாடுவதிலிருந்தே, அப்பெண் அக அழகும் (பரமபக்தி, ஞானம், அடக்கம்..) மிக்கவள் என்பதைக் குறிப்பில் கொள்ள வேண்டும்.

மயிலைப் பாடிய ஆண்டாளுக்கு, மழை மேகம் ஞாபகத்துக்கு வந்து விட்டது போலும்! மழை மேகத்தைக் கண்டு தானே மயிலானது தோகை விரித்தாடும் இல்லையா! மழை மேகம் கருமை நிறம், அதுவே கண்ணனின் நிறம். அதனால்,(முற்றம் புகுந்து) முகில்வண்ணன் பேர் பாடப்பட்டது :-)

*****************************************
பாசுரச் சிறப்பு:

இப்பாசுரத்தில், அசாதாரணமான அழகுடையவளும், குலப்பெருமை வாய்த்தவளும் ஆன ஒரு கோபியர் குலப்பெண்ணை ஆண்டாள் துயிலெழுப்புகிறாள். "கண்ணனே உபாயமும் உபேயமும்" என்று உணர்ந்த உத்தம பக்தையை கோதை துயிலெழுப்புகிறாள்.

ஆண்டாள் "பொற்கொடியே, புனமயிலே, செல்வப் பெண்டாட்டி" என்றெல்லாம் போற்றுவதிலிருந்தே இந்த பாகவதை ஆச்சார்யனிடம் கற்றுணர்ந்த உத்தம அதிகாரி என்பது புலப்படுகிறது. பொற்கொடியே எனும்போது குலத்தாலும், புனமயிலே எனும்போது வடிவாலும், செல்வப்பெண்டாட்டி எனும்போது குணத்தாலும் என்று எல்லாவற்றிலும் சிறந்த அடியவள் இவள் என்பதும் தெளிவு.

பொற்கொடி - பக்தி
அல்குல் - பரபக்தி
புனமயில் - பரம பக்தி


ஆக, பொற்கொடி, புற்றரவல்குல், புனமயில் ஆகியவை அவ்வடியவளின் (ஜீவாத்மா) கண்ணன் (பரமாத்மா) மீதான உன்னதமான பக்திக்கான உருவகங்களே!


"புற்றரவல்குல்" என்பது குறித்து பிரதிவதி பயங்கரம் அன்னங்கார்ச்சார்யார், 'நாகமானது தனது இருப்பிடமான புற்றுக்குள் இருக்கையில், தனது கம்பீரத்தை சுருக்கிக் கொண்டு அடக்கமாக இருப்பது போல, பக்தி மிகுந்திருக்கும்போது, ஞானமும் வைராக்கியமும் எளிதில் கைகூடுவதாக' அற்புதமாக அருளியிருக்கிறார்!

அதாவது, பக்தி, ஞானம், வைராக்கியம் என்ற மூன்றில் பக்திக்கே உயர்வான இடம் வைணவத்தில் வழங்கப்பட்டுள்ளது. கர்மம், ஞானம் இன்னபிற யோகங்கள் பெறப்படுபவை, ஆனால் பக்தி யோகம், அதுவாக வாய்க்க வேண்டும்! மேலும், மயிலானது மகிழ்ச்சியாக இருக்கையில் தன் தோகையை விரித்தாடுவது போல, நற்குணங்களுடைய சீடன் அமையும்போது ஆச்சார்யனின் ஞான விகாசம் வெளிப்பட்டு நன்மை பயக்கிறது என்று சுவாமிகள் அருளியிருக்கிறார்!

'முற்றம்' என்ற பதம் பரமனின் அடியார் கூடும் இடம் என்பதைக் குறிக்கிறது.

குலசேகரப் பெருமாள் அருளிய "
அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்பமிகு பெருங்குழுவு கண்டு* யானும்-
இசைந்துடனே என்றுகொலோ இருக்கும் நாளே"

என்பதை நினைவு கூர வேண்டும்.

அப்பெண்ணின் (ஆயர் குல) உறவினர், கர்ம யோகத்தை (எண்ணற்ற பசுக்களை பராமரிப்பது, பால் கறப்பது, பகைவர்களிடமிருந்து தம் மக்களை பாதுகாப்பது) சிரத்தையாக கடைபிடிப்பவர்கள். அதாவது, கடமையைச் செய்வது, இறை சேவைக்கு ஒப்பானது என்று கோதை நாச்சியார் வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்!

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து - புராண, இதிகாச, உபநிடதங்களை கற்று, அதன் ஞானத்தை உள்ளடக்கிய (அதனால் சீடர்கள் புடை சூழ இருக்கும்!) ஆச்சார்யத் தன்மையை உட்பொருளாகக் கொண்டுள்ளது.

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் - வேதங்களை சரியாக கற்காதவரையும், இறைநம்பிக்கையற்றவரையும், சாத்திரங்கள் குறித்த விவாதங்களில் வெற்றி கொண்டு, அதன் மூலம் பக்தி மார்கத்தை செம்மைபடுத்தி, இறையன்பு ஒன்றையே முன் நிறுத்திய வைணவப் பாரம்பரியத்தை போற்றும் தன்மை இதன் உள்ளுரையாம்

குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே - வேதங்களில் பாண்டித்யம் பெற்றவரை ஆச்சார்யனாக அடையும் பேறு பெற்ற சீடனை குறிப்பில் உணர்த்துகிறது ( கோவலர் - கோ என்றால் வாக்கு அல்லது வேதம்) கோவலர் என்பது வேதத்தை பாதுகாக்கும் ஆச்சார்யர்கள். அத்தகைய ஆச்சார்யர்களாகிய கொழுகொம்பின் மேல் படர்ந்து ஞானம் பெறும் கொடியாக (உத்தம அதிகாரியான) சீடன் விளங்குகிறான்.

புற்றரவு - ஆச்சார்ய பக்தியும், மிகுந்த அடக்கமும் உடைய சீடன் (புற்றில் இருக்கும் நாகம் தன்னைச் சுருட்டிக் கொண்டிருக்கும் அல்லவா?)
புனமயிலே - பெருமாளின் ஆயிரம் நாமங்களை ஓதும் சீடன்
போதராய் - ஆனந்த அனுபவத்தில் திளைப்பாயாக!

சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து - வைகுண்டத்திலிருந்து வந்திருக்கும் பெருமாளின் தூதர்கள் (பெரும் வைணவ அடியார்கள்) அனைவரும்
நின் முற்றம் புகுந்து - உனது சூட்சம சரீரத்தில் நிழைந்து (ஆன்மாவை அடைந்து)
முகில்வண்ணன் பேர் பாட - பரமனது திருநாமங்களை ஓதியபடி உன்னை பரமபதத்திற்கு கூட்டிச் செல்லக் காத்திருக்கின்றனர்.

சிற்றாதே - அறிந்தோ, அறியாமலோ செய்த வினைகள் குறித்த கவலையை உதறியதால்
பேசாதே - அகங்காரத்தையும் மமகாரத்தையும் தொலைத்து, பகவானின் திருநாமங்கள் தவிர வேறெதையும் பேசாமல்
செல்வப் பெண்டாட்டி நீ - கண்ணனுக்கு உகந்த அடியவள் நீ, கிருஷ்ணானுபவம் என்ற செல்வம் மிக்க அடியவள் நீ!
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய் - எங்களது அஞ்ஞானத்தையும், குறைகளையும் விலக்கி, எங்களது உய்வுக்கு உதவாமல் இருப்பதன் அர்த்தம் என்னவோ
?

*************************************

இப்பாசுரம் பூதத்தாழ்வாருக்கு கோதை நாச்சியாரின் திருப்பள்ளியெழுச்சி என்று ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!

"குற்றமொன்றில்லாத கோவலர்" என்பது பூதத்தாருக்கு மிகவும் பொருந்தும், ஏனெனில் அவர் கருவிலிருந்து உருவான குறை கூட இல்லாமல், மலரிலிருந்து தோன்றியவர். ஏன், முதல் 3 ஆழ்வார்களுமே அயோனிஜர்கள் தான்!

"பொற்கொடியே" என்று பூதத்தாழ்வார் தனது திருவந்தாதியில் தன்னை அழைத்துக் கொண்டுள்ளார்
"தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம்"
எம்பெருமான் என்ற கொம்பு மீது படரும் கொடியாக தன்னை வர்ணிக்கிறார் !

கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து - இவ்வரியையும் பூதத்தாருடன் (முதல் 3 ஆழ்வார்களுடனேயே கூட) தொடர்புபடுத்த முடியும்.

பொய்கையாரின் முதல் திருவந்தாதி 'கறவை கணம்' என்றும், பூதத்தாழ்வாரின் 2வது திருவந்தாதி "கறவை கணங்கள்" என்றும், பேயாழ்வாரின் 3ஆம் திருவந்தாதி "கறவை கணங்கள் பல" என்றும் குறிப்பிடப்படுகின்றன!

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் - நாம் பல இடங்களுக்குச் சென்று பகவத் விரோதிகளை விவாதங்களில் வென்று நல்வழிக்கு கொணர வேண்டும் என்று பூதத்தாரே அவரது பாசுரம் ஒன்றில் இயம்பியுள்ளார்

பண்டு இப்பெரும்பதியை ஆக்கி* பழிபாவம்-
கொண்டுஇங்கு* வாழ்வாரைக் கூறாதே,* - எண்திசையும்-
பேர்த்தகரம் நான்குடையான்* பேரோதிப் பேதைகாள்*
தீர்த்தகரர் ஆமின் திரிந்து.

புற்றரவல்குல் - மேலே சொன்னபடி அல்குல் = பரபக்தி.

பரபக்தி என்றால் பரமன் மேல் வைத்த பேரன்பு. இவ்வாழ்வார் தனது திருவந்தாதியை "அன்பில்" தொடங்கி, அன்பிலேயே முடித்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டியது.

முதல் பாசுரம்:

அன்பே தகளியா* ஆர்வமே நெய்யாக,*
இன்புருகு சிந்தை இடுதிரியா,* - நன்புருகி
ஞானச் சுடர்விளக்கு ஏற்றினேன்* நாரணற்கு*
ஞானத் தமிழ்புரிந்த நான்.


கடைசிப் பாசுரம்:

மாலே. நெடியானே.* கண்ணனே,* விண்ணவர்க்கு-
மேலா.* வியன்துழாய்க் கண்ணியனே,* - மேலால்-
விளவின்காய்* கன்றினால் வீழ்த்தவனே,* என்தன்-
அளவன்றால்* யானுடைய அன்பு.



ஞானம்,பக்தி,விரக்தி என்ற மூன்றில் பக்தி நடுவண் உள்ளது. அது போல, முதல் மூன்று ஆழ்வார்களில் பூதத்தார் நடு ஆழ்வார் !

சுற்றத்து தோழிமார் - பொய்கையாரும் பேயாழ்வாரும் பூதத்தாரின் உறவினர்! மற்ற ஆழ்வார்கள் தோழர்கள்!
முகில்வண்ணன் பேர் பாட - பூதத்தாழ்வார் தான் முதன் முதலில் "முகில் வண்ணன்" என்று பெருமாளை வர்ணித்தவர் என்பது கவனிக்க வேண்டியது.

உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.

ஆச்சார்ய மயிலானது (புனமயிலே!) கார்மேக வண்ண மேனி கொண்ட எம்பெருமானை போற்றிப் பாடுவது இயல்பானது தானே :)


****************************************************
சில குறிப்புகள்:

கண்ணனின் நெருக்கத்தால், கோகுலத்தில் வாழ்ந்த பசுக்கள் பலகாலம் இளமையாகவே இருந்ததால், அவை மிகுந்த எண்ணிக்கையில் இருந்தன (கற்றுக் கறவைக் கணங்கள் பல!). அவற்றை அடையாளம் காண்பதும் மிகுந்த சிரமமாகவே இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, தேவர்களில் பலர், பசுக்களாக உருவெடுத்து, கண்ணனுக்கு அருகாமையிலேயே தாங்கள் இருக்கும்படி ஏற்பாடு செய்து கொண்டனராம் :)

அப்பசுக்களை தான் மாயக்கண்ணன் எத்தனை தடவை ஆபத்திலிருந்து காத்துள்ளான்!
அகாசுரன் பசுக்களை விழுங்க முயன்றபோது,
பிரம்மன் ஒரு முறை பசுக்களையும், ஆயர்களையும் சிறை பிடித்து ஒளித்து வைத்தபோது,
இந்திரன் ஒரு தடவை பெருமழையையும், காற்றையும் உருவாக்கி இன்னல் விளைவித்தபோது
என்று அவற்றை ரட்சித்து எத்தனை லீலைகள்!

செற்றார் திறல் அழிய - ஆயர்கள் பகைவர்களைக் கூட கொல்ல மாட்டார்கள். அவர்களின் பலமும் கர்வமும் அடங்குமாறு செய்வார்கள்

புற்றரவல் குல் புனமயிலே - ஆண்டாளுக்கு, பாம்பைப் பற்றிப் பேசியவுடன், அதன் பரம வைரியான தோகை மயிலின் ஞாபகம் வந்து விட்டது போலும் :) பொதுவாகவே, ஆச்சாரியனை மயிலுடன் ஒப்பிடும் வழக்கமிருந்தது.

புழுபூச்சிகள் மயிலின் அருகில் செல்லாதது போல, தீய எண்ணங்கள் ஆச்சார்யனை அண்டுவதில்லை.
மயில் தனது இறகை அவ்வளவு சீக்கிரம் இழக்காது. அது போல, ஆச்சார்யனும், தனது ஞானச்சுற்றத்திலிருந்து வெளி வந்தாலும், தகுதியறிந்தே ஒருவனை சீடனாக ஏற்பார்.
மயிலுக்கு மேகம் பிடிக்கும். ஆச்சார்யனுக்கு மேக வண்ணனைப் பிடிக்கும் :)

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட -- வைணவர்க்கு பிடித்த இடம் முற்றம், அதாவது திவ்ய தேசங்கள், அங்கு சென்று பெருமாளை வணங்கி வழிபட்டு மங்களாசாசனம் செய்தல்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, December 25, 2010

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - TPV10

திருப்பாவை பத்தாம் பாசுரம்

பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத்துழாய் முடி நாராயணன், நம்மால்
போற்றப்பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்!


பொருளுரை:

பாவை நோன்பிருந்து இப்பிறப்பில் சொர்க்கம் அடைந்து சுகம் பெறப்போகும் பெண்ணே! வாசல் கதவை நீ திறக்காவிட்டாலும் கூட எங்களோடு ஒரு வார்த்தையும் பேசலாகாதோ? நறுமணமுள்ள துளசி மாலையை தலையில் சூடிய நாராயணன், நம்மால் போற்றி வணங்கப்படத் தக்கவனும், நமக்கு வேண்டிய பலன்களைத் தந்தருளும் தர்ம பரிபாலகனும் ஆவான் !



ராமனாக அவதரித்த காலத்தில், எம்பெருமானால் மரணத்தின் வாயில் வீழ்ந்த கும்பகர்ணன், தனக்கே உடைமையாகிய பெருந்தூக்கத்தை (உறக்கத்தில் உன்னை மிஞ்ச முடியாமல் தோற்றுப் போய்!) உன்னிடம் தந்து விட்டுச் சென்றுவிட்டானோ? எல்லையில்லாச் சோம்பல் கொண்டவளே ! எங்களுக்கு கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவளே! தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!"

பாசுரக் குறிப்புகள்:

'பாவை நோன்பிருந்து கிருஷ்ணானுபவத்தில் திளைக்கலாம் என்று நேற்று கூறி விட்டு இன்று நாங்கள் மிக்க எதிர்பார்ப்புடன் உன் வீட்டு வாசலில் அதிகாலையில் காத்திருக்க, நீயோ கதவைக் கூட திறக்காமல் தனியாக சொர்க்கம் போக திட்டம் போட்டவள் போல தூங்கிக் கொண்டிருக்கிறாயே' என்று ஆண்டாள் விசனப்படுவதிலும் ஒரு நயம் இருக்கத் தானே செய்கிறது!

"சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" எனும்போது, கண்ணன் உறங்கும் பாகவதையின் வீட்டினுள்ளே இருக்கிறானோ என்ற ஐயம் தெரிகிறது. அதாவது, கண்ணன் இருக்கும் இடம் தானே கோபியர்க்கு சொர்க்கம்! சொர்க்கத்தில் இருப்பவள், வீட்டின் கதவைக் கூடத் திறக்காதவள், தங்களுடன் ஒரு வார்த்தை கூட பேசாமல் அமுக்கமாக இருப்பது வெளியில் உள்ள கோபியருக்கு பொருமலை ஏற்படுத்துமா, இல்லையா!

"நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்ற பிரயோகம் கண்ணன் வீட்டின் உள்ளே இருக்கிறானோ என்ற (வெளியில் காத்திருக்கும் கோபியரின்) சந்தேகத்தை வலுப்படுத்துவதாய் அமைந்துள்ளதை அவதானிக்க வேண்டும். அதாவது, துளசியின் வாசம் வீசும் இடத்தில் கண்ணன் வாசம் செய்கிறான் என்ற விஷயம் கோபியர் அறியாததில்லையே!

துளசிக்கு வைணவத்தில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. பாற்கடல் கடைந்த காலத்தில் பிறந்த துளசி தனக்கு மிகவும் உகந்தது என்று கண்ணனே அருளியிருக்கிறான். ஏன் விஷ்ணுசித்தர் ஆண்டாளை கண்டெடுத்ததே ஒரு துளசிச் செடியின் அடியில் தான்!

பெரும் தவம் செய்து பிரம்மனிடம் "நித்தியத்துவத்தை" வரமாக கேட்க நினைத்த கும்பகரணன், (கலைவாணியின் திருவிளையாடலால்) நாக்கு குளறி "நித்திரத்துவத்தை" வரமாக கேட்டு விட, தன் வாழ்வின் பெரும்பகுதியை தூக்கத்தில் கழிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டான். அவனுக்கு அது துர்பாக்கியம், தேவர்களுக்கோ அவன் உறக்கத்திலிருந்ததே பெரும்பாக்கியம்!

ஆக, சற்று எரிச்சலில் தான் வெளியில் இருக்கும் கோபியர், 'கும்பகரணனையே உறங்குவதில் தோற்கடித்து, அவனது பெருந்துயிலையே பரிசாகப் பெற்றவள் போல தூங்குகிறாயே' என்று தூங்குபவளை இடித்துரைத்தனர்.

நாற்றத்துழாய் முடி நாராயணன் என்று கண்ணனின் வெளித் தோற்றத்தழகை பாடிய ஆண்டாள், அதே நாராயணன் தான் ஸ்ரீராமன் எனும்போது, ராமனே புண்ணியத்தின் மொத்த வடிவம் என்று போற்றுவதை (போற்றப் பறை தரும் புண்ணியனால்) கவனிக்க வேண்டும்! "ராமோ தர்மவான் விக்ரஹ" என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

'நமது நற்பலன்களால் மட்டுமே மோட்சம் சித்திக்காது, நம்மை ரட்சிப்பதும், தடுத்தாட்கொள்வதும் அப்புண்யனின் பெருங்கருணையே' என்பதை கோதை நாச்சியார் குறிப்பில் உணர்த்துகிறார்! அதனால் தான் வெளியில் நிற்கும் கோபியர் "பரமனை எப்படிப் பற்றுவது" என்று துடிக்கையில், உள்ளிருப்பவளால் (எல்லாவற்றையும் கண்ணனிடம் ஒப்படைத்து விட்டு!) நிச்சிந்தையாக தூங்க முடிகிறது போலும் :)

பரமனை அடைவது மோட்சமானாலும், அதுவும் பரமானாலேயே வாய்க்கப்பெறும் என்பது தான் இப்பாசுரத்தின் அடிநாதமான செய்தி.

"கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும்" என்ற பிரயோகத்தை அவதானிக்க வேண்டும். ஆண்டாள் புண்ணியனான ராமன் அவ்வசுரனை வதம் செய்தான் என்று பாடவில்லை! மற்ற அசுரர்கள் தாங்கள் போரிடுவது பரமனோடு என்பதை உணரவில்லை. ஆனால் கும்பகரணனோ அது அறிந்தே (செஞ்சோற்றுக் கடனுக்காக!) ராமனுடன் பெரும்போரிட்டு மரணத்தைத் தழுவினான்! கும்பகரணன் கூற்றத்தின் வாயில் வீழ்ந்தாலும், பரமன் அவனுக்கு மோட்சம் அளித்தான்.

அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய் - 'பெண்ணே, நீ கிடைத்தற்கரிய ஆபரணம் போல் அழகானவள். அதனால், தூக்கக் கலக்கத்தில் எழுந்து வந்து கதவைத் திறக்காமல், முக ஒளி பிரகாசிக்க (தேஜஸாய்) கதவைத் திறந்து கொண்டு வா' என்று கொள்வது ஒரு வகை! "நீ தூங்கி வழியும் முகத்தோடு வந்தால் கூட, (தேற்றமாய்) தேஜஸாய் தான் இருப்பாய், உடனே கதவைத் திற" என்று கொள்வதும் நயம் தான்!
**********************************

நான் ஏற்கனவே புள்ளும் சிலம்பின காண் என்ற 6வது திருப்பாவைப் பாசுரப் பதிவில் சொல்லியபடி, 6வது பாசுரம் தொடங்கி 15வது வரை உள்ள பத்து பாசுரங்கள் முதலில் விழித்தெழுந்தவர் இன்னும் உறக்கத்தில் இருப்பவரை எழுப்பும் நோக்கில் பாடப்பட்டவை.

இவை பத்து ஆழ்வார்களை (மதுரகவியாழ்வார், ஆண்டாள் தவிர்த்து) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகம் உண்டு ! மதுரகவியார் நம்மாழ்வருக்குள் அடக்கம் என்பதால் அவரை தனியாக துயிலெழுப்ப ஆண்டாள் நாச்சியார் துணியவில்லை :-)
இந்த 10 திருப்பாவைப் பாசுரங்களும் (6-15) ஆண்டாளின் "ஆழ்வார் திருப்பள்ளியெழுச்சி"யாகக் கருதப்படுகிறது. ஆழ்வார்களுக்கான கோதை நாச்சியாரின் சுப்ரபாதம் இது! தனது ஞானதிருஷ்டியால் உணர்ந்து, தனக்குப் பின்னால் அவதரிக்கவிருக்கும் 3 ஆழ்வார்களின் (தொண்டரடிபொடி, திருமங்கை, திருப்பாணாழ்வார்) திருப்பள்ளியெழுச்சிக்கும் சேர்த்தே ஆண்டாள் நாச்சியார் திருப்பாசுரங்கள் பாடியுள்ளது குறிப்பிட வேண்டியது.

பாசுரச் சிறப்பு:

இப்பாசுரம் முதலாழ்வர்களில் முதலாவதாக வரும் பேயாழ்வாரை துயிலெழுப்புவதாக ஐதீகம். ஏன் என்பதற்கு அழகான விளக்கமும் உண்டு !!!

திருக்கோவலூர் கோயிலை அடைந்த முதல் மூன்றாழ்வார்களில், பொய்கையாரும், பூதத்தாரும் பெருமாளுக்கு இரு விளக்குகளை ஏற்றினர். இதை நோன்பு நோற்பதாக (நோற்று!) கொண்டால், உபய அனுஷ்டானம் செய்யப்பட்டு விட்டதல்லவா?

முதலடியிலேயே ஆண்டாள் "நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்" என்று விளிப்பதைப் பாருங்கள். பேயாழ்வார் தனது திருவந்தாதியை பாடுவதற்கு முன்பாகவே, பெருமாளின் திவ்ய தரிசனத்தை காணும் பெரும்பேறு பெற்றவர். அவ்வாழ்வாரின் முதல் பாசுரத் தொடக்கமே, "திருக் கண்டேன், பொன்மேனி கண்டேன்" என்று தொடங்குவதாம்!

அது போலவே, திருக்கோவலூர் கோயிலில் முதலில் நுழைந்த பொய்கையார் கதவை மூடி விட்டார். பின் வந்த பூதத்தாருக்கு அவர் கதவைத் திறந்தார். கடைசியாக வந்த பேயாழ்வாருக்கு பூதத்தார் கதவைத் திறந்து விட்டார். ஆனால், பேயாழ்வாருக்கு அடியவர் வேறொருவருக்கு கதவைத் திறக்கும் வாய்ப்பு அமையவில்லை. அதனாலேயே, "வாசல் திறவாதார்" என்ற சொற்பதம் பேயாழ்வாருக்கு மிக மிகப் பொருத்தமான ஒன்றே :-)

"நாற்றத் துழாய்முடி நாராயணன்" என்பது இந்த ஒரு பாசுரத்தில் மட்டுமே ஆண்டாள் எடுத்தாண்டுள்ளார். ஏனெனில், பேயாழ்வாருக்கு திருத்துளசி மேல் பெருங்காதலுண்டு! திருத்துழாயை தனது பல பாசுரங்களில் அவர் பெருமாளுக்கு சூட்டி மகிழ்ந்தவர்.

பொன்தோய் வரைமார்வில் பூந்துழாய்,*அன்று திருக்கண்டு கொண்ட* திருமாலே

மலராள் தனத்துள்ளான்* தண்துழாய் மார்பன்,

மண்ணுலகம் உண்டுமிழ்ந்த* வண்டறையும் தண்துழாய்,* கண்ணனையே காண்க

அரும்பும் புனந்துழாய் மாலையான்* பொன்னங் கழற்கே,* மனம்துழாய் மாலாய்

தண்துழாய்த் தார்வாழ்* வரைமார்பன் தான்முயங்கும்,* - காரார்ந்த வானமரு மின்னிமைக்கும்


திருமழிசை பிரானை துயிலெழுப்பும் முந்தைய (9வது) பாசுரத்தில், ஆண்டாள் அவர் "அனந்தலோ?" என்று ஐயம் கொள்கிறாள். இதில் "ஆற்ற அனந்தலுடையாய்" என்று சொல்வதை வைத்து, திருமழிசையாரின் ஆச்சார்யனான பேயாழ்வாரையே இப்பாசுரத்தில் குறிப்பிடுகிறார் என்பதும் ஏற்புடையதே!

அது போல, "அருங்கலமே" என்று பேயாழ்வாரை அழைப்பதும் ஏற்புடையதே! பெருமானின் திவ்ய தரிசனத்தை பிரபந்தம் பாடத் தொடங்கும் (திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன்!) கணத்திலேயே அனுபவிக்கப் பெற்ற பேயாழ்வார் கிடைத்தற்கரிய ஆபரணம் போன்றவர் தானே, இதிலென்ன சந்தேகம்!

குருபரம்பரை சம்பிரதாயப்படி, இப்பாசுரம் பெரிய நம்பியை (பராங்குச தாசர்) துயிலெழுப்புவதாக ஓர் ஐதீகமும் உண்டு. பெரிய நம்பி உடையவரின் ஆச்சார்யன் ஆவார்.


பாசுர உள்ளுரை:

பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில் (நோற்று) கர்மயோகத்தை கடைபிடிக்காவிடினும் (வாசல் திறவாதார்) எவ்வித தடங்கலுமின்றி (மாற்றமும் தாரார்) அவ்வடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கப் பெறுகிறது (சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்).

இங்கு "பெருந்துயில்" என்பது அறியாமையையும், "கூற்றம்" என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பவையாம். இவையே பரமனைப் பற்றுவதற்கு தடைகளாக இருக்கின்றன.

இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபியர் குலப்பெண் தன்னை பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டிருப்பவள்! இவ்வடியவள் ஓர் உத்தம அதிகாரி ஆவாள். இவள் கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்!

(அவளுக்கு மட்டுமே ஆனந்தம் தரும்!) அவளது ஆத்ம அனுபவத்திலிருந்து வெளிவந்து தங்களது அகங்காரத்தையும், அஞ்ஞானத்தையும் விலக்கி, நல்வழி செலுத்தி,தங்களது உய்வுக்கு உதவுமாறு, கோபியர், உறங்கும் (ஞானமிக்க) அடியவளை வேண்டுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது.

இப்பாசுரத்தில் "சுவர்க்கம்" என்பது பகவானுடன் ஐக்கியமாவதைக் (மோட்சம் சார் பகவத் அனுபவத்தை) குறிக்கிறது. இவ்வடியவள் பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை செய்து முடித்த திருப்தியுடன் பரமனின் நெருக்கம் தந்த ஆனந்த நிலையில் இருக்கிறாள்.

மற்றொரு விதத்தில் சுவர்க்கம் = சு + வர்க்கம் = நல்ல + சுற்றம்
அதாவது, உறங்கும் அடியவள் சிறப்பு மிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பது புலனாகிறதல்லவா?

அருங்கலமே என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு.
கிடைத்தற்கரிய 1. பாத்திரம் 2. அணிகலன்

அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளை தேக்கி வைக்கும் பாத்திரமாகவும், மனதூய்மை, பக்தி, தர்ம சிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்வ குணங்களாகிய அணிகலன்களாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்தி கூர்மையும் ஞானமும், அகங்காரத்தைத் தந்து (ஒருவரை) திசை திருப்பி விடும் அபாயத்தையும், இறை சேவையும், சமூக சேவையும் கைகோர்த்து இருக்க வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்குத் தரும் செய்தியாக இப்பாசுரத்தை காண முடிகிறது.


என்றென்றும் அன்புடன்
பாலா

***491***
பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்

Friday, December 24, 2010

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - TPV9

இத்திருப்பாவைப் பாசுர மீள் இடுகையில், பல செய்திகளையும், படங்களையும் சேர்த்திருக்கிறேன்.

திருப்பாவை ஒன்பதாம் பாடல்


மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப் பாடுவோம்!

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!


பொருளுரை:
மாசற்ற வைர வைடூரியங்கள் பதிக்கப்பெற்ற மாடத்தில், நாற்புறமும் தீபங்கள் ஒளிர, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுறும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ?

அவள் என்ன ஊமையோ, செவிடோ , (கர்வத்தால் உண்டான) சோம்பல் மிக்கவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்திற்கு வயப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்பி பாவை நோன்பிற்கு கூட்டிச் செல்வதற்கு "வியத்தகு கல்யாண குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் உறைபவனே, திருமகளின் நாயகனே" என்றெல்லாம் எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை உரக்கச் சொல்வோம்!

தூமணிமாடத்து-On the gem-studded balcony,
சுற்றும் விளக்கெரிய-Surrounded by long stemmed lamps,
தூபம் கமழ-With incense burning,
துயிலணை மேல்-(You, who lie) on the soft mattress,
கண் வளரும்-Eyes closed in sleep,
மாமான் மகளே!-My uncle’s daughter!
மணிக்கதவம் தாள் திறவாய்!-Open your jeweled doors!
மாமீர்! அவளை எழுப்பீரோ!-Aunt! Won’t you wake her up?
உன் மகள் தான் ஊமையோ?- Is your daughter dumb,
அன்றிச் செவிடோ? அனந்தலோ?-Perhaps deaf, or lost her senses?
ஏமப் பெருந்துயில்-Why this great sleep?
மந்திரப்பட்டாளோ?-Is she under a magical spell?
மாமாயன், மாதவன், வைகுந்தன்-Supreme Enchanter! Lakshmi’s Lord! Supreme being!
என்றென்று நாமம் பலவும்-And such-like names
நவின்று ஏலோரெம்பாவாய்!- We have invoked! Oh! My Maidens!

பாசுரக் குறிப்புகள்:

உறங்குபவள் பெரும்பாகவதை என்பதால் தான் ஆண்டாள் அவளது தூங்கும் நிலையைக் கூட "கண் வளரும்" என்று பெருமையாகக் குறிப்பிடுகிறாள்! அமைதியான யோகத்துயிலது. தூமணி மாடமும், சுற்றும் விளக்கும், தூபமும், துயிலணையும் ஒரு செல்வச்சூழலை சொல்கிறது அல்லவா? அத்தகைய செல்வமே, எது சத்தியம், சாஸ்வதம் என்பதை மறந்து விடச் செய்கிறது! அந்த நிலையை "ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ" என்று ஆண்டாள் நயம்பட பாடுகிறாள்!

"தூமணி மாடத்து" என்று தொடங்கும் இப்பாசுரம் போலவே, நம்மாழ்வார் அருளிய பத்து தொலைவில்லிமங்கலப்(ஒரு வைணவ திவ்யதேசம்) பாசுரங்களில் முதல் பாசுரம், "துவளில் மாமணி மாடமோங்கு" என்று தொடங்குவதை குறிப்பிட வேண்டும். அந்த பத்தும் தொலைவில்லிமங்கலப் பெருமானிடம் மையல் கொண்ட பராங்குச நாயகியைப் பற்றிய திருப்பாசுரங்கள். இவை இரண்டையும் ஒப்பு நோக்கி, வைணவ ஆச்சார்யர் அருமையான வியாக்கினங்களை வழங்கியிருக்கிறார்கள்.












பரமனானவன் தேவர்கள் தன் திருவடியில் சமர்ப்பித்த ரத்தினங்களில், கசடானவற்றைத் தூய்மைப்படுத்தி
"துவளில் மாமணிகளாக" தான் வைத்துக் கொள்வானாம்! தூய்மையால் பிரகாசிக்கின்ற ரத்தினங்கள் ஆண்டாள் குறிப்பிடும் இந்த பாகவதையின் "தூமணி மாடத்தை" அலங்கரித்தனவாம்!

நாயகிபாவம் (கண்ணனின் பரிபூர்ண அன்புக்கு/அருளுக்கு பாத்திரமான உணர்வு!) இங்கு அழகாக வெளிப்படுகிறது! உறங்கும் பாகவதையின் தாயாரை, துணைக்கு அழைப்பதால் (மாமீர் அவளை எழுப்பீரோ?), மோட்ச புருஷார்த்தத்தை அடைய புருஷகாரத்துடன் (பாகவதையின் தொடர்பு) ஆச்சார்ய அனுக்ரகமும் அவசியம் என்பது வலியுறுத்தப்படுகிறது!

ஒரு ஆண்மகனாய் இருந்து நாயகிபாவத்தைப் பெறுவது கடினம்! ஆண்டாள் என்ற பெண்ணுக்கு (ஏன் மற்ற கோபியருக்கும்!) அது மிக எளிதில் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாய் இருந்ததில் அதிசயம் ஏதுமில்லை!


இந்த நாயகிபாவம் சில நேரங்களில் செல்லக் கோபத்தையும் ஏற்படுத்தும் என்பதற்கு, திருமங்கையாழ்வாரே எடுத்துக்காட்டாக இருக்கிறார்! ஒரு சமயம், பரமனைச் சந்திக்கும் மிகுந்த எதிர்பார்ப்புடன் கலியனார் திருநின்றவூர் பெருமானை தரிசிக்கச் சென்றபோது, கோயில் பட்டர் சன்னதியின் திரையை மூடி விட்டார். ஆழ்வாருக்கு கோபம் ஏற்பட்டு, "திருநின்றவூரில் நீரே வாழ்ந்து போம்" என்று சொல்லி விட்டாராம்!

நான்கு வகை புருஷார்த்தங்களில் (தர்மம், அர்த்தம், காமம், மோட்சம்), மோட்சமே உயரியது ஆக இருப்பினும், ஒரு சமயம் ராமானுஜரிடம், "நான்கில் எது உண்மையான புருஷார்த்தம்?" என்று கேள்வி வைக்கப்பட்டபோது, சன்யாசியான அவர் கூறிய பதில் ஆச்சரியபடுத்தும் வகையில் உள்ளது! உடையவர், "அந்த காமம் எல்லாம் கண்ணனுக்கே"(கண்ணன் மேலான காமமே (பேரன்பு என்று பொருள்) உண்மையான புருஷார்த்தம்") என்றாராம்!

துயிலில் இருக்கும் அந்த பாகவதையை எழுப்ப அவள் தாயாரை துணைக்கழைத்தும், அவளை சிறிது கடிந்து பேசியும் அவள் காதில் எதுவும் விழாத காரணத்தினாலே, கோதை நாச்சியார் பரமனின் திருநாமங்களைச் சொன்னாலாவது எழுந்திருப்பாளோ என்று "மாமாயன் மாதவன் வைகுந்தனென்று" பாடுவதாகக் கொள்வதிலும் ஒரு நயம் இருக்கிறது இல்லையா! அப்பாகவதையும் துயில் விட்டு எழுந்தாள் என்று சொல்லவும் வேண்டுமோ!

மாமாயனின் மாயத்தை யாரால் புரிந்து கொள்ள முடியும்? நம்மாழ்வாரே,
"அமைவுடை நாரணன் மாயையை அறிவார் யாரே?" என்று அருளியிருப்பதை இங்கு நினைவு கூர வேண்டும்.

வராக அவதாரத்தின்போது, பெருங்கடலானது பரமனின் கணுக்காலை மட்டுமே நனைத்தது, கிருஷ்ணாவதாரத்திலோ யசோதாவால் கண்ணனை கையளவு நீரிலே குளிப்பாட்ட முடிந்தது! அவனது மாயை அத்தகையது. "மாமேகம் சரணம் வ்ரஜ" என்று எல்லோரையும் தன் திருவடிகளைப் பணியச் சொன்ன கண்ணபிரானே, யசோதா தன்னைக் குளிப்பாட்டும்போது அவளது இரு கால்களையும் இறுகப் பற்றிக் கொள்வானாம் :-)

"மாமாயன் .... நாமம் பலவும் நவின்றேலோ" என்பதையும் கவனிக்க வேண்டும். அதாவது, மாமாயன் மாதவன் வைகுந்தன் என்ற மூன்று நாமங்களை அனுஷ்டிப்பது, அவனது பல (1008) திருநாமங்களைப் பாடுவதற்கு நிகரானது என்ற செய்தியை ஆண்டாள் நமக்கருளுகிறாள்! மேலும், அவன் மாமாயன்!! ஆயர்ப்பாடியில் கண்ணனாக இருந்தாலும், திருமகளின் கணவனான திருப்பாற்கடல் மாதவனும் அவனே, பரமபதத்தில் வீற்றிருக்கும் வைகுந்தனும் அவனே! ஆக, பூரண சரணாகதியைக் கைக் கொண்டு நாம் அடைய வேண்டிய இடம் அந்த வைகுந்தமே! அதனால் தான் "வைகுந்தனை" கடைசியாக வைத்தாள் ஆண்டாள்!

பாசுரச் சிறப்பு:
இப்பாசுரமும் உள்ளர்த்ததில் ஆச்சார்யனை கொண்டாடுவதாகவே கருதப்படுகிறது.

எட்டாவது பாசுரத்தில் ஆண்டாளும் அவளது தோழிகளும் துயிலெழுப்பிய பெண், கண்ணனுக்கு உகந்தவள் மட்டுமே, ஆனால் (9வது) இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் ஞானமிக்கவள்! உறங்கும் பெண்ணின் சிறப்பு கருதியே, ஆண்டாள் அவளை "மாமான் மகளே" என்று சொந்தம் கொண்டாடுகிறாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! அதோடு, மாமன் என்பவர் சதாச்சார்யன் (தாய் தந்தையரை விட உயர்ந்த) ஸ்தானத்தில் இருப்பவராகிறார். அவரது மகள் எனும்போது, உறங்கும் அப்பெண் ஆச்சார்யனின் அந்தரங்க சீடராகிறார்!

'மாமான் மகளே' என்றழைத்ததற்கு, திருவாய்ப்பாடியில் ஒரு நெருங்கிய உறவு தனக்கு வேண்டும் என்று ஆண்டாள் விரும்பியதே என்ற சுவையான காரணமும் உண்டு :)

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய, தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும் -
இதை விட அருமையாக ஒருவர் உறங்குவதை கவிநயத்துடன் (கோதை நாச்சியாரைத் தவிர!) யாராலும் சொல்ல இயலாது. பகவத் அனுபவத்தில் திளைத்த, ஞானமிக்க ஒருத்தியின் துயில் கூட கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகி விடுகிறது, ஆண்டாளுக்கு :)

அப்பெண் ஏன் இப்படியொரு உறக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறாள் ? கண்ணனிடத்தில் அனைத்துக் கவலைகளையும் ஒப்படைத்து விட்டதால், நிச்சிந்தையாக அவளால் உறங்க முடிகிறது!
அனன்யாஸ் சிந்தயந்தோ மாம் யே ஜனா பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபியுக்தானாம் யோகஷேமம் வஹாம்யஹம்


என்று பகவானே அருளியிருக்கிறான் அல்லவா ?

அது போலவே, உறங்கும் பெண்ணின் தாயிடம் சொல்லியும், அப்பெண் எழுத்திராததால், ஆண்டாள் மிதமான கோபத்துடன், "உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்கிறாள்! உடனே, உறங்குபவளின் பகவத் விஷய ஞானமும், அவள் பக்தியும் நினைவுக்கு வர, ஆண்டாள், "ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?" என்று ஐயத்தின் பலனை (Benefit of Doubt) அப்பெண்ணுக்கே தருகிறாள்!

ஏமம் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இரவு, இன்பம், உன்மத்தம், கலக்கம், களிப்பு, காவல், சேமம், திரைச்சீலை, புதையல், பொன், மயக்கம், விபூதி என்று ...


இனி, பாசுரத்தின் உள்ளுரையைப் பார்ப்போம்.

1. தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய - தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ?

ஞான தீபமாகிய "விளக்கு" என்ற பதத்தை ஆழ்வார் பாசுரங்களில் பல இடங்களில் காணலாம்.
"ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன்", "உய்த்துணர்வென்னும் ஒளி கொள் விளக்கேற்றி", "மிக்கானை மறையை விரிந்த விளக்கை"
என்று பல உதாரணங்களைக் காட்ட முடியும்.

2. தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும் - "தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் கூறுவார்.

"துயிலணை மேல் கண் வளரும்" என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!

3. மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்! - "எளிதில் உணர இயலா பகவத் விஷயங்களை உபதேசிக்குமாறு சீடன் ஆச்சாரியனை உள்ளத் தூய்மையோடு வேண்டுகிறார்" என்பது உட்பொருள். அதாவது, ஆச்சார்யன் ஒருவரே, நமது புலன் சார் தமோ குணங்கள் மற்றும் வினைப்பயன்கள் என்ற கதவின் தாளை விலக்கி, மோட்ச சித்திக்கு வேண்டிய ஞானத்தை அருள வல்லவர் என்று கொள்ளலாம்.

4. மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான் ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ? - பகவத் சேவைக்கு வேண்டி அவ்வடியவளை எழுப்ப வைணவ ஆச்சார்யர்களிடம் (மாமீர்) வேண்டுகோள் வைக்கப்படுகிறது! பகவத் ஞானத்தால் உண்டான தண்ணொளி மிகு நிலையானது (state of enlightenment), "ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்பதன் உள்ளர்த்தமாம்!

"உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது...

5. ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? - அஷ்டாட்சர மந்திரத்தின் ஆதிக்கமே இந்த ஏமப் பெருந்துயிலுக்கு காரணம்!


சூடிக்கொடுத்த நாச்சியாரின் தந்தை பெரியாழ்வார் பாசுர வரிகளில் வரும் மயக்க நிலையை ஒத்தது இது:
பெய்யுமா முகில் போல் வண்ணா.* உன் தன் பேச்சும் செய்கையும்*
எங்களை மையலேற்றி மயக்க* உன்முகம் மாயமந்திரந்தான் கொலோ*

6. மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய் - ஆச்சார்யனை அடைந்து, உபதேசம் பெற்று பேரின்பம் தரும் பகவத் அனுபவத்தில் திளைப்போம் என்பது எளிமையான உட்பொருளாம். இது தவிர இவ்வாக்கியத்திற்கு பல உள்ளுரைகள் உள்ளன!

மாமாயன் என்பது நீர்மையையும், மாதவன் என்பது திருமகளின் நாயகன் என்பதையும், வைகுந்தன் என்பது பரத்துவத்தையும் குறிப்பன. இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய சங்கதி ஒன்றுண்டு. பெரிய பிராட்டியின் சம்பந்தத்தினாலேயே, நீர்மையும், பரத்துவமும் பகவானுக்கே சித்திக்கும் என்பதை கோதை நாச்சியார், 'மாதவன்' என்பதை நடுவண் (மாமாயன், வைகுந்தன் என்ற பதங்களுக்கு இடையில்) வைத்து மிக அழகாக நிலைநாட்டி விடுகிறார் !

மாமாயன் என்ற பதத்தை பலவகையாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்:

மாமாயன் = மா + ஆயன் = ஆயர் குலத்தில் பெரியவன் / சிறந்தவன்

மாமாயன் = மா + ஆயன் = திருமகள் தொடர்பு உடைய ஆயர் குலத்தவன் (இங்கு மா என்பது திருமகளைக் குறிக்கும், மாலோலன், மாதவன் போல)

மாமாயன் = மா + ஆயன் = இல்லை + ஆயன் (இவன் மகாவிஷ்ணு, தர்மத்தை நிலை நாட்டவே ஆயர் குலத்தினில் கோபாலனாக "அவதரித்தவன்" என்று கொள்ளலாம்)

'மாமாயன்' பற்றி எப்படி மாய்ந்து மாய்ந்து சொல்ல வேண்டியிருக்கிறது பாருங்கள் :-)


திருமழிசையாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:

இப்பாசுரம் (முந்தைய பாசுரத்தில் துயிலெழுப்பப்பட்ட) நம்மாழ்வாருக்கு முன்னர் அவதரித்த திருமழிசை பிரானை துயிலெழுப்புவதாகச் சொல்வது ஒரு ஐதீகம்! இங்கு "மாமான் மகளே" என்ற சொல்லாடல் ஒருவித இரத்த சம்பந்தத்தைக் குறிப்பதாம்! அதெப்படி ஆண்டாளுக்கும் திருமழிசைபிரானுக்கும் ரத்த சம்பந்தமான உறவு இருக்க முடியும்?

கோதாஸ்துதி ஆண்டாளை திருமகள் அவதாரமாகத் தானே சொல்கிறது. புராணங்கள் மகாலஷ்மி (திருமகள்) பிருகு குலத்தில் அவதரித்ததாகக் கூறுகிறது! ஆண்டாள் ஒரு அந்தணரால் (விஷ்ணுசித்தர்) கண்டெடுக்கப்பட்டு தன்னை ஒரு கோபியர் குலப்பெண்ணாக வரிந்து கொண்டவர். அது போல, திருமழிசையார் ஒரு ரிஷியின் மகனாக பிருகு குலத்தில் அவதரித்து, பின்னர் ஒரு வேடனால் (பிரம்பன் குலம்) வளர்க்கப்பட்டவர். அதனால், இரத்த சம்பந்தம் உண்டு என்று கொள்வது பொருத்தமானதே.

"தூமணி மாடத்து" என்ற நாச்சியாரின் பிரயோகத்தை அவதானிக்க வேண்டும். பட்டை தீட்டப்படாத மாணிக்கக்கல் தெளிவில்லாமல் ஒரு கூட்டுக்குள் இருப்பது போல காட்சியளிக்கும். அத்தகைய மாணிக்கம் போல இருந்த எம்பெருமானை "உட்கிடந்த வண்ணமே புறம்பொசிந்து காட்டிடே" என்று திருமழிசையாழ்வார் ஒரு சமயம் வேண்ட, பரமனும் அவருக்கு அவ்வண்ணமே காட்சியளித்தான். ஆக, "தூமணி மாடத்து" திருமழிசையாழ்வாரைக் குறிப்பதாகச் சொல்வது பொருத்தமான ஒன்றே.

"சுற்றும் விளக்கெரிய" என்ற சொற்பதம் ஞானத்தினால் உண்டான ஒளியை (தேஜஸ்) குறிப்பதாம். திருமழிசை பிரான் அவரே அருளியபடி, "சாக்கியம் கற்றோம், சமணம் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகமநூல் அறிந்தோம்" என்று பல்வகை தத்துவ விசாரங்கள் செய்து ஞானத்தெளிவு பெற்ற பெருந்தகை என்பதால், இச்சொற்பதம் அவரை குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்லலாம் தானே.

தூபம் கமழ - ஆழ்ந்த ஞானம் இருந்தால் மட்டும் போதாது, அது பிரயோகத்தால் செழிக்க வேண்டும், பிறருக்கு பயன் தரவும் வேண்டும். திருமழிசை பிரான் "தூபம் கமழ"த் தான் பூவுலகில் வாழ்ந்தார்!

துயிலணை மேல் கண்வளரும் - இவ்வாழ்வார், எம்பெருமானின் கிடந்த திருக்கோலம் மீது காதல் கொண்டவர்! வாழ்வின் பெரும்பகுதியை திருக்குடந்தையிலும் திருவெஃகாவிலும் கழித்தவர். பாசுரம் ஒன்றில்,

"நாகத்தணை குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத்தணை அரங்கம் பேரன்பில்
நாகத்தணை பாற்கடல் கிடக்கும் ஆதிநெடுமால்
அணைப்பர் கருத்தன் ஆவான்"


என்று பெருமானின் கிடந்த கோல திவ்யதேசங்களைப் பட்டியலிடுகிறார்!

"துயிலணை மேல் கண்வளரும் மாமான் மகளே" என்பதில், மாமான் என்பதற்கு மஹா மஹான் என்பது உள்ளர்த்தமாம். அதாவது, "துயிலணை மேல் கண்வளரும் மாமான்" திருவெஃகாவில் பள்ளி கொண்டுள்ள "சொன்ன வண்ணம் செய்த" பெருமானே தான்! ஆழ்வார், "நீயும் உன் பைந்நாகப்பாய் சுருட்டிக் கொள்" என்றபோதும், "நீயும் உன் பைந்நாகப்பாய் விரித்துக் கொள்" என்ற போதும் "சொன்னவண்ணம்" செய்தவனில்லையா அந்த யதோக்தகாரி!

ஆழ்வாரால் தொழப்பட்ட திருக்குடந்தை ஆராவமுதப் பெருமானும், ஆழ்வாரின்,"எழுந்திருந்து பேசு வாழிகேசனே!" என்ற சொல்லுக்குக் கட்டுப்பட்டு, பாதி கிடக்க/பாதி எழுந்தவன் இன்றும் அத்திருக்கோலத்திலேயே (உத்தான சயனம்) தான் அருள் பாலிக்கிறான்! ஆக, திருமழிசை பிரான் தந்தையான பெருமானுக்கு ஒரு "மகள்" போல நெருக்கமானவர். வைணவ ஆச்சார்யர் சிலர், திருமழிசை பிரானுக்கு வைணவத்தின் சிறப்பை உணர்த்தி, அவருக்கு ஆச்சார்யனாக இருந்த பேயாழ்வாரை "மாமான்" குறிப்பிலுணர்த்துவதாகக் கூறுவர்.

உம்மகள் தான் ஊமையோ? - ஒரு சமயம் பெரும்புலியூர் சென்ற தி.ஆழ்வார் அங்கு சில அந்தணர் வேதம் ஓதுவதைக் கண்டார். அவர்களோ, ஆழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், வேத பாராயணத்தை அவர் செவி மடுக்கலாகாது என்று ஓதுவதை நிறுத்தி விட்டனர்! ஆழ்வார் அங்கிருந்து நகர்ந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டார்.

திரும்பவும் வேதம் ஓதுதலைத் தொடர எண்ணிய அந்தணர்களுக்கு, அவர்கள் விட்ட இடம் மறந்து போனது! ஆழ்வார் மௌனமாக, ஒரு கருப்பு எள்ளை எடுத்து அதை தன் நகத்தால் பிளந்து, அந்தணர் விட்ட வேதவாக்கியத்தின் (கிருஷ்ணா நாம வ்ரீஹீனாம் நகஹ் நிர்பின்னம்) பொருளை ஜாடையாக உணர்த்தினார்!

தி.ஆழ்வாரின் ஞானத்தையும் பெருமையும் உணர்ந்து வெட்கம் அடைந்த அந்தணர்கள் அவர் காலில் விழுந்து வணங்கி மன்னிக்கும்படி வேண்டினர். ஆக, "உம்மகள் தான் ஊமையோ?" என்ற சொல்லாடல் வாயிலாக கோதை நாச்சியார், வேதமந்திர வாக்கியத்தை செயல் மூலம் அந்தணருக்குணர்த்திய தி.ஆழ்வாரைத் தான் குறிப்பதாகச் சொல்வது பொருத்தமே!

செவிடோ? - அதே பெரும்புலியூரில், சில அந்தணர்கள் ஒரு யாகத்துக்குச் சென்ற ஆழ்வார் மீது அவமானப்படுத்தும் வகையில் சொற்களை வீசியபோது, தி.ஆழ்வார் அதைப் பொருட்படுத்தாமல் இருந்த நிகழ்வை ஆண்டாள் நினைவு கூர்வதாகச் சொல்லலாம்!

அனந்தலோ - ஆழ்வாரே, தன் நான்முகன் திருவந்தாதியில்

தொழில் எனக்குத்* தொல்லை மால்தன் நாமம் ஏத்த*
பொழுது எனக்கு மற்றதுவே போதும்*

தரித்திருந்தேன் ஆகவே* தாரா கணப்போர்*
விரித்துரைத்த* வெந்நாகத்துன்னை*
தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்* வணங்கி வழிபட்டும்*
பூசித்தும் போக்கினேன் போது.


என்று அருளியவாறு, ஓர் அனந்தலைப் (ஆழ்ந்த துயில் - யோக நித்திரை) போல பகவத் விஷயங்கள் தவிர்த்து, மற்ற செயல்களில் பற்றெதுவும் இல்லாமல் இருந்ததைத் தான் ஆண்டாள் இப்படி நயமாகச் சொல்கிறாள் என்று கொள்ள வேண்டும்!

ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ? - மற்ற ஆழ்வார்களை விடவும், பெருமான் மீது இவ்வாழ்வார் கொண்ட பேரன்பும், ஒரு சித்தரைப் போன்ற இவரது பற்றறு நிலையும் தனித்துவமானது! இதை "ஏமப்பெருந்துயில்" என்று சொல்வது பொருத்தமே! ஆழ்வார்,

பிதிரும் மனம் இலேன்* பிஞ்ஞகன் தன்னோடு,*
எதிர்வன் அவன் எனக்கு நேரான்*
அதிரும் கழற்கால மன்னனையே* கண்ணனையே*
நாளும் தொழக் காதல் பூண்டேன் தொழில்.


தி.ஆழ்வாரின் இந்த சொல்லாட்சி தனித்துவமானது! தி.ஆழ்வார் தனது ஆச்சார்யனான பேயாழ்வாரின் ஞான ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டதை "மந்திரப்பட்டாளோ" குறிப்பதாக சில பெரியோர் கூறுவர்.

மாமாயன் - ஆழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஆண்டாள் பயன்படுத்தியிருப்பதை அவதானிக்க வேண்டும்! ஆழ்வார் தன் திருப்பாசுரங்களில், "மாயமென்ன மாயமே", "மாயமாய மாக்கினாய் உன் மாயமுற்றும் மாயமே" என்று மாயனின் மாயத்தை எண்ணி மாய்ந்திருக்கிறார் :)

அது போலவே, மாதவன், வைகுந்தன் என்ற திருநாமச் சொல்லாடல்களை தி.ஆழ்வாரின் பாசுரங்களில் காணலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

***490***
பென்சில் ஓவியம் நன்றி: தேசிகன்
ENGLISH VERSE TRANSLATION
Courtesy: SHOBA RAMASWAMY

Thursday, December 23, 2010

கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு - TPV8

இது திருப்பாவையின் எட்டாவது பாசுரம்

கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


பொருளுரை:
கிழக்குத் திசையில் வானம் வெளுத்து பொழுது புலர ஆரம்பித்துள்ளது. எருமைகள் (பால் கறக்கப்படுவதற்கு முன்னர்) பனி படர்ந்த சிறு புல்வெளிகளில் மேய்வதை நீ பார்க்கவில்லையா ? பாவை நோன்பு ஒன்றையே தலையாய கடமையாக எண்ணிக் கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் எங்களுடன் அழைத்துச் செல்ல உன் வாசலில் குரல் கொடுத்த வண்ணம் இருக்கிறோம்!

குதூகலம் நிறைந்த பெண்ணே! இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்ற அரக்கனின் வாயைக் கிழித்து மாய்த்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் எனும்) மல்லர்களை அழித்தவனும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் தலைவனும் ஆன கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி, (அவனை அடைந்து) நாம் வணங்கினால், நம்மைக் கண்ட மாத்திரத்தில் 'ஐயோ' என்று மனமிரங்கி, கருணையோடு நம் குறைகளை ஆராய்ந்து அருள் புரிவான். எனவே பாவை நோன்பிருக்க வாராய்!



பாசுரச் சிறப்பு:

அதிகாலையில் கீழ்வானம் சட்டென்று வெளுப்பதில்லை. இருண்டிருந்த வானம், மெல்லச் சிவந்து, வண்ணக் கலவையாகிய நிலையிலிருந்து மெல்ல பூரண வெண்மையை அடைகிறது! அது போல, அடியார்களும் (ஆச்சார்யனின் துணையோடு!) பலவித அனுபவ நிலைகளைக் கடந்து பின் ஞானத்தெளிவு பெறுகிறார்கள்!

இப்பாசுரத்தில் துயிலெழுப்படும் கோபிகை ஒரு சிறந்த பாகவதை, கண்ணனுக்குப் ப்ரியமானவளும் கூட. அதனால் தான் ஆண்டாள் "கோதுகலமுடைய பாவாய்" என்றழைத்து, "மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி, அந்த ஞானமிக்கவளை தங்களுடன் கூட்டிச் செல்ல இவ்வளவு பிரயத்தனப்படுகிறாள்! பொழுது விடியும் வேளை வந்து விட்டதை 'எருமைகள் சிறுவீடு மேய' கிளம்பி விட்டதைச் சொல்லி அப்பெண்ணை எழச் சொல்கிறாள்.

சிறந்த அடியவருடன் கூட்டாகச் சென்று பரமனை வழிபடுதலாகிய உயரிய வைணவக் கோட்பாட்டைத் தான் கோதை நாச்சியாரின் இப்பாசுரமும் முன்னிறுத்துகிறது!

அது எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பெண்ணுக்கு "சிறுவீடு மேய்வது" (பனித்துளி படர்ந்த புற்களை மேய்வது) போன்ற மாடு மேய்க்கும் ஆயர்களின் பிரயோகங்கள் எல்லாம் தெரிய வந்தது? அதற்கு, ஆண்டாள் தன்னை ஒரு கோபிகையாகவே வரிந்து கொண்டதைத் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்!

”தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந்து அருளேலோரெம்பாவாய்”.

"தேவர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் பரமனைப் பற்றினால், நம் குற்றம் குறைகளை கருணையுடன் ஆராய்ந்து நமக்கருளுவான்" என்ற தத்வத்தை இங்கு ஆண்டாள் உரைக்கிறாள். இந்த தத்வத்தைத் தான் கண்ணன் கீதையில் இப்படி அருளுகிறான்:

”மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய”
மயி ஸர்வமிதம் ப்ரோதம் ஸூத்ரே மணிகணா இவ”” (கீதை:07:7)


அதாவது, “தனஞ்ஜயனே, என்னைக்காட்டிலும் மேலானது வேறு ஒன்றுமில்லை, நூலிலே மணிக்கோவைபோல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நூலான (சூத்திரத்தால்) என் மீது தான் கோக்கப் பட்டு இருக்கின்றன”

ஆவாவென்றாராய்ந்து - கண்ணன் "ஆஹா" என்று ஆச்சரியப்படுகிற மாதிரி ஆண்டாள் பாடியதிலும் விஷயமிருக்கிறது! "ஆஹா, உங்களுக்கு இப்போதாவது என்னை அடைய வழி தெரிந்ததே!" என்று கண்ணன் கோபியரை அரவணைத்துக் கொள்வானாம்! அதாவது, ஆவாவென்று (பெருங்கணையுடன்!) கண்ணன் ஆராய்வான் எனும்போது, நமக்கு அனுகூலமான முடிவு நிச்சயம் கிடைக்கும் என்று ஆண்டாள் குறிப்பில் உணர்த்துகிறாள்!

எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி...

நம்மாழ்வார் திருப்பள்ளியெழுச்சி:

கோதுகலமுடைய பாவாய் என்ற பதம் நம்மாழ்வாரைக் குறிப்பதாம். பரசார பட்டர் நம்மாழ்வர் ஒருவரே கிருஷ்ண குதூகலத்தின் ஒரே வடிவம் என்கிறார்! மேலும் நம்மாழ்வரே திருவாய்மொழியில் பல இடங்களில் தன்னை ஒரு பாவையாக பாவித்துக் கொண்டு பாடியிருப்பதை காரணமாகச் சொல்லலாம்.

அதோடு, "எழுந்திராய்" என்பது நம்மாழ்வாருக்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில் அவர் எல்லா திவ்யதேசங்களிலும் அமர்ந்த திருக்கோலத்தில் தான் எழுந்தருளியுள்ளார்! அமர்ந்திருப்பவரைத் தானே எழுந்து கொள்ளச் சொல்ல முடியும் :-)

"கீழ்வானம் வெள்ளென்று" சூரிய உதயத்தின் போது தானே இருக்கும். அது போல, கலியுகத்தின் தொடக்கத்தில் இந்த வாகுலபூஷண பாஸ்கரன் அவதரித்ததால், அடியார்களுக்கு ஞானத்தெளிவு பிறந்தது!

கீழ்வானம் என்பது லீலாவிபூதி, மேல்வானம் என்பது நித்யவிபூதி. நம்மாழ்வார் தனது திருவாய்மொழிப் பாசுரங்களில் லீலாவிபூதி நித்யவிபூதியாவதாக அருளியிருப்பதை (ஓராயிரத்துள் எப்பத்து உரைக்க வல்லார்க்கு வைகுண்டமாகும் தம்மூரெல்லாம், வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வார் மன்னூடே) காண முடிகிறது.

எருமை சிறுவீடு மேய்வான் - வீடு மோட்சத்தைக் குறிக்கிறது. கீழ்வீடு கைவல்யத்தைக் குறிக்கிறது. நம்மாழ்வார் தான் இதை "குறுகமிக உணர்வத்தோடு நோக்கி" என்று முதலில் தனது பாசுரம் ஒன்றில் குறித்தார். எருமை என்பது தாமச (அகங்காரம்,மமகாரம்) குணங்களைக் குறிப்பதாம். குருகூர் பிரானின் திருஅவதாரத்திற்கு முன் இக்குணங்கள் மாந்தர் பலரிடம் மிகுந்து காணப்பட்டதால், அவர்கள் கைவல்ய நிலையையே அடைய முடிந்தது!

"மிக்குள்ள பிள்ளைகளை" எல்லாம் தடுத்து நிறுத்தி இந்த கோபிகையை துயிலெழுப்பிக் கூட்டிச் செல்வதாகப் பாடுவதன் வாயிலாக, ஆண்டாள் அக்கோபிகையின் சிறந்த பாகவதத் தன்மையை உணர்த்துகிறாள். ஆழ்வார்களில் தலையான நம்மாழ்வாரைத் தான் நாச்சியார் குறிப்பிடுவதாகக் கொள்வது இங்கு பொருத்தமானதே!

"போவான் போகின்றாரை" என்பது ஆச்சரியப்படுத்தும் ஒரு பிரயோகம்! "போவதற்காக போகின்றவரை" என்பதற்கு என்ன பொருள்? அதாவது (பரமனைக் காணப்) போவதாகிய செயலே போதுமானது! அதுவே இலக்கும் ஆகி விடுகிறது. உபாயம், உபேயம் என்று இரண்டும் ஒரு மாதிரி கலந்து விடுகிறது! இதையே நம்மாழ்வார் தனது திருவிருத்தத்தில் "போவான் வழிக்கொண்ட மேகங்களே" என்று அருளியிருக்கிறார்!

அது போல "கூவுவான் வந்து நின்றோம்" என்று கோதை பாடுவதும் நம்மாழ்வாருக்குப் பிடித்த சொல்லாடலை ஞாபகப்படுத்துவதாக அமைந்துள்ளது.

"கூவிக்கொல்லும் காலமென்னும் குறுகாதோ" "என்னைக் கூவியருளாய் கண்ணனே" "கூவிக்கொல்லாய் வந்தந்தோ" என்று நம்மாழ்வார் தன் பாசுரங்களில் அருளியிருக்கிறார்.

"வான நாயகனே! அடியேன் தொழ வந்தருளே!" என்று எம்பெருமானை தனக்கு தரிசனம் தர நம்மாழ்வார் அழைத்தது போல, "தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்" என்று ஆண்டாள் நம்மாழ்வாரை பரமனின் தரிசனத்திற்கு துணைக்கழைக்கிறாள்!
*********************************************

பாசுர உள்ளுரை:

1. இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.

2. கீழ்வானம் வெள்ளென்று - ஒரு விதத்தில், கீழ்வானம் என்பது (அடியவர் வசமிருக்கும்) பரம்பொருளை வேண்டும் ஆதாரத்தன்மையை குறிப்பில் தெரிவிக்கிறது. அந்த ஆதாரமானது, "வெள்ளென்று" தூய்மையானதாக இருந்தால் தானே, "மேல் வானமாகிய" எம்பெருமான் அதன் மேல் வந்து அமருவான் !! - அன்னங்காச்சாரியார் உரை

"கீழ்வானம் வெள்ளென்று" என்பதற்கு, மோட்ச சித்தியைத் தேடும், ஆனால் உபாயம் அறியாமல் அக இருளில் உழலும் சீடன் (பிரபன்னன்) ஒருவனுக்கு, ஆச்சார்ய சம்பந்தத்தினால், சத்வ குணம் தலையெடுப்பதையும் ஞான வெளிச்சம் கிடைப்பதையும் உள்ளுரையாக அபினவ தேசிகன் கூறுவார் !!

3. எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது.


'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!!

4. மிக்குள்ள பிள்ளைகளும் - பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால், சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.

5. உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் - 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.

6. பாடிப் பறை கொண்டு - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்

7. மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய தேவாதி தேவனை - அடியவர்களின் புலன்களை தறிகெட்டு அலையச்செய்து, அவர்களை அழிவை நோக்கிச் செலுத்தும் அல்லாதவைகள் (அகங்காரம்,மமகாரம்..) அனைத்தும் அரக்கர்களாகவும், அவற்றை முறியடித்து அடியார்களை நெறிப்படுத்தும் ஆச்சார்ய ஞானம், அவ்வரக்கர்களை மாயத்த இறை சக்தியாகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளன.

8. தேவாதி தேவன் - காஞ்சி வரதராஜப் பெருமானை குறிப்பில் உணர்த்துவதாக சில பெரியோர் கூறுவர், இன்னும் சிலர் தேவநாதப் பெருமானை (திருவகீந்திரபுரம்)

9. சென்று நாம் சேவித்தால் - ஆச்சார்ய திருவடியைப் பற்றுதல்


10. ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, December 22, 2010

கீசு கீசு என்றெங்கும் - TPV7

இது ஒரு மீள்பதிவு, அதே சமயம், பாசுர குறிப்புகளையும் சில படங்களையும் புதிதாகச் சேர்த்திருக்கிறேன்.
*******************************************

திருப்பாவையின் ஏழாம் பாசுரம்:

பைரவி ராகம , மிச்ரசாபு தாளம்

பறவைகளின் கீசு, கீசு ஒலியும், தயிற்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோ ரெம்பாவாய்.



"கீசு கீசு என்று வலியன் குருவிகள் தங்களுக்குள் பேசும் இனிய ஒலி உன் காதுகளில் விழவில்லையா, பேதைப்பெண்ணே!

வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கல கலவென்று என்று ஒலிக்க, கைகளை மாற்றி மாற்றி மத்தினால் தயிர் கடையும் சப்தத்தை நீ கேட்டிலையோ? கோபியர் கூட்டத்திற்குத் தலைவியே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? ஒளி வீசும் முகத்தைக் கொண்டவளே! எழுந்து கதவைத் திறந்து, பாவை நோன்பை மேற்கொள்ள வருவாயாக!



பாசுர குறிப்புகள்:

இப்பாசுரத்தில் பலவகையான செவிக்கினிமையான ஓசைகள் சொல்லப்பட்டுள்ளன.
1. ஆனைச்சாத்தன் குருவிகள் கூவும் ஓசை
2. ஆய்ச்சியரின் அச்சுத்தாலியும், ஆமைத்தாலியும் கலகலவெனும் ஒலி
3. அவர்கள் தயிர் கடையும் சப்தம்
4. நாராயண சங்கீர்த்தனம்

இவ்வளவு ஓசைகளுக்கும் நடுவில் எழுப்பப்படும் பாகவதை உறங்குவதால், அவளை "பேய்பெண்ணே" என்று ஆண்டாள் சொல்வது நியாயம் தானே!

குதிரை வடிவில் வந்த கேசி என்ற அசுரனை அழித்ததால் கேசவன் என்ற திருநாமம் கொண்ட மார்கழிக்கான மூர்த்தியைப் பாடியும், "நாயகப் பெண்பிள்ளாய், தேசமுடையாய்" என்று நயமாக பாராட்டி அழைத்தும் அந்த பாகவதையை எப்பாடு பட்டாவது எழுப்பி, பரமனடி பற்ற தங்களுடன் கூட்டிச் செல்ல அவளது தோழியர் விழைவது, கூட்டுச் சரணாகதி(ததீயரோடு சரண் புகுதல்)என்ற வைணவத்தின் உயரிய கோட்பாட்டை வலியுறுத்துவதாகும்.

ஆனைச்சாத்தன் என்பது பரமனைக் குறிக்கிறது என்றும் கொள்ளலாம், அதாவது யானையைக் காத்தவன் என்றும் யானையை அழித்தவன் என்றும்! பரந்தாமன் கஜேந்திரன் என்ற யானையை முதலையிடமிருந்து காத்து ரட்சித்தான், கம்சன் அனுப்பிய குவலயாபீடம் என்ற யானையை கண்ணன் அழித்தான்.

காசு, பிறப்பு, தயிர் என்ற மூன்றும் முறையே அஷ்டாட்சரம், த்வயம் மற்றும் சரமசுலோகம் ஆகிய மூன்று மகா மந்திரங்களை உணர்த்துவதாகவும் ஒர் உள்ளர்த்தம் உண்டு.

"தேசமுடையாய்" என்பது தூங்கும் பெண்ணின் ஒளி வீசும் முகத்தை (தேஜஸ்) முன்னிறுத்திச் சொன்னது. அத்தகைய தேஜஸ் தாஸ்ய பாவமும், தாஸ்ய ஞானமும் உள்ளவருக்கே (பரமனே எஜமானன், அவனைச் சரண் புகுதலே உய்வதற்கான ஒரே உபாயம் என்று முழுமையாக உணர்ந்தவர்க்கே!) வாய்க்கும்! பூவுலகிலேயே தாஸ்ய ஞானம் வாய்க்கப் பெற்றவரில் அனுமன், பீஷ்மர், கோபியர் ஆகியோர் அடங்குவர்.

பாசுரச் சிறப்பு:

1. ஆறாம் பாசுரத்திலிருந்து (புள்ளும் சிலம்பின காண்) பதினாறாம் பாசுரம் (நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய) வரை உள்ள 11 பாசுரங்கள், (ஆண்டாள் தவிர்த்து மற்ற) பதினோரு ஆழ்வார்களை துயிலெழுப்பப் பாடப்பட்ட பாசுரங்கள் என்று வானமாமலை ஜீயர் உள்ளுரை கூறியிருக்கிறார். குறிப்பாக, இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது!

2. முதலில் 'பேய்ப்பெண்ணே' என்றும் பின் 'நாயகப் பெண்பிள்ளாய்' என்றும் மாறுபட அழைப்பது போலத் தோன்றினாலும், எப்படியாவது உறங்கபவளை எழச் செய்ய வேண்டும் என்ற காரணத்தினாலேயே சொல்லப்படுவதால், மாறுபாடு இல்லை! அதாவது, அடியவரோடு கூட்டாக இறை அனுபவத்தில் திளைத்தலை இப்பாசுரம் வலியுறுத்துகிறது.

3. "தேசமுடையாய்" என்றும் துயிலெழுப்பப்படும் பெண் விளிக்கப்படுவதால், அவள் பரம பாகவதை என்பதும் தெளிவாகிறது!

4. வலியன் குருவியை பாரத்வாஜப் பறவை என்றும் அழைப்பர். ஒரு முறை, வலியன் குருவி வடிவில் பாரத்வாஜ முனிவர், பெருமாளை வணங்கி வழிபட்டதாக ஒரு பழங்கதை உண்டு.

5. "ஆனைச் சாத்தன்" என்பது அடியவரின் (யானையின் வலிமைக்கு ஒப்பான) புலன் சார்ந்த உணர்வுகளை நெறிப்படுத்தி, தன் வசம் சேர்த்துக் கொள்ளும் பரந்தாமனை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது.

6. "கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு" என்பது, பரமனுக்கும், திருமகளுக்கும் இடையே, (அடியவர்க்கு அருள் வழங்கும் நோக்கிலே) நடக்கும் சம்பாஷணையைக் குறிப்பதாகும்.

7. 'பேய்ப்பெண்' என்ற பதம், பகவத் அனுபவத்தில் மூழ்கி விட்டதால், பேதை போலத் தோன்றும் சிறந்த அடியாரைக் குறிக்கிறது.

8. 'வாச நறுங்குழல் ஆய்ச்சியர்' --- 'வாச நறுங்குழல்' என்பது உபனிடதங்களையும் சாத்திரங்களையும் கற்றறிந்த தன்மையையும், 'ஆய்ச்சியர்' என்பது ஆச்சார்யர்களையும் குறிப்பில் உணர்த்துகிறது.

9. 'காசும் பிறப்பும்' என்ற ஆபரணங்கள் இங்கே வேதங்களை (அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதியை) குறிப்பில் உணர்த்துகின்றன.

10. "மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ" --- மிகுந்த தேடலுக்குப் பின் ஏற்பட்ட ஞானத்தின் பயனால் விளைந்த, "நாராயணனே பரதேவதா" என்ற தெளிதலை, ஆச்சார்யர்கள் உரக்கக் கூறுகின்றனர்!

11. "நாயகப் பெண்பிள்ளாய்" - பகவத் அனுபவ ஞானத்தினால், தலைமைப் பண்பைப் பெற்ற அடியார்கள்

12. நாராயணன் மூர்த்தி --- சிவனையும், பிரம்மனையும் படைத்தவன்!

13. கேசவன் --- மார்கழி மாதத்தின் அபிமான தேவதையாகப் போற்றப்படுபவன்

13. நீ கேட்டே கிடத்தியோ? - இவ்வாறு பரமன் பெருமை அறிந்தும், சரணாகதியை மேற்கொள்ளாமல் இருப்பது சரியோ ?

14. திறவேலோ ரெம்பாவாய் - பரமனைப் பற்றுவதற்கு பிரபத்தி உபாயத்தை கை கொள்ள வருவாயாக !


****************************************************
இப்பாசுரம் குலசேகர ஆழ்வாரை துயிலெழுப்புகிறது என்று கூறுவதற்கான அழகான விளக்கம் கீழே:

ஆண்டாளின் "ஆனச்சாத்தன், காசும் பிறப்பும், பேய்ப்பெண்ணே, நாயகப்பெண்பிள்ளாய், தேசமுடையாய், கேட்டே கிடத்தியோ" ஆகிய சொற்பிரயோகங்களை கவனிக்க வேண்டும்.

முதலாவதாக, 'ஆனைச்சாத்தன்' என்பது மலையாளத்திலிருந்து வந்த சொல். குலசேகரப் பெருமான் மலை நாட்டில் அவதரித்தவர் என்று தொடர்பு படுத்திக் கொள்ளலாம். அது போலவே, 'காசும் பிறப்பும்' என்று ஆண்டாள் நகையைப் பற்றிப் பேசும்போது, குலசேகராழ்வார் வாழ்வில் நடந்த (மன்னனின் அமைச்சர்கள் கோயில் நகையை ஒளித்து வைத்து விட்டு, கோவிலில் பணிபுரிந்த வைணவர்கள் அதை திருடி விட்டதாக புகார் கூறி, பின் தங்கள் தவறை உணர்வதாக சொல்லப்படும்) நிகழ்வுடன் தொடர்புபடுத்திக் கொள்ளலாம்.

இரண்டாவதாக, குலசேகரப் பெருமானே (தனது பெருமாள் திருமொழியில்)தன்னை "பேயன்" என்று கூறிக் கொள்வதை நோக்குதல் அவசியம்!

பேயரே* எனக்கு யாவரும்* யானும் ஓர்-
பேயனே* எவர்க்கும் இது பேசியென்*
ஆயனே.* அரங்கா என்று அழைக்கின்றேன்*
பேயனாய் ஒழிந்தேன்* எம் பிரானுக்கே


மூன்றாவதாக, குலசேகராழ்வார் தன்னை "கொல்லிக்காவலன் கூடல் நாயகன்" என்று தனது கையெழுத்துப் பாசுரங்களில் கூறிக் கொள்வது வழக்கம். அதனாலேயே, கோதை நாச்சியார் அவரை, "நாயகப் பெண்பிள்ளாய்" என்று விளிக்கிறார், இப்பாசுரத்தில் !!! மேலும், ஒரு ஆரத்தின் நடுவண் இருக்கும் கல், 'நாயகக்' கல் என்றழைக்கப்படும். குரு பரம்பரை எனும் மாலையின் நடுநாயகமாக ஜொலிப்பவர் எம்பெருமானார் (எந்தை ராமானுச முனி).

அது போல, ஆழ்வார்கள் வரிசை எனும் மாலையில் நடுநாயகமாகத் திகழ்பவர் குலசேகரப் பெருமாள். எப்படி? மாலையின் ஒரு புறம், முதல் மூன்று ஆழ்வார்கள், திருமழிசையாழ்வார் மற்றும் நம்மாழ்வார் என்று ஐவர், மறுபுறம் பெரியாழ்வார், ஆண்டாள்,தொண்டரடிப்பொடி, திருப்பாணர் மற்றும் திருக்கலியன் ஆகியோர்.

நான்காவதாக, பகவான் கிருஷ்ணன் கீதோபதேசத்தில், 'தேஜஸ்' என்பதை சத்திரியர்களின் முக்கியமான இயல்பாகக் கூறியிருக்கிறான். 'தேசமுடையாய்' (தேஜஸ் மருவி தேசம் ஆகியது)என்றழைக்கும்போது, அது சத்திரிய குல மன்னனான குலசேகரரைக் குறிப்பில் உணர்த்துவதாகச் சொல்வது மிக ஏற்புடையதே.

ஐந்தாவதாக, "கேட்டே கிடத்தியோ?" என்று ஆண்டாள் பாடும்போது, பாகவதர்களிடமிருந்து ராமாயண காவியத்தை திரும்பத் திரும்ப கேட்டு, ராம பக்தியில் மூழ்கித் திளைத்திருந்த குலசேகரப் பெருமானை இப்பாசுரம் துயிலெழுப்புவதாக கொள்வது சரியானதே.

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails